சுதந்திர தின விழா:39 பேருக்கு ரூ.1.75 கோடியில் நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் சங்கீதா வழங்கினார்

சுதந்திர தின விழாவையொட்டி 39 பேருக்கு ரூ.1.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சங்கீதா வழங்கினார்.

Update: 2023-08-16 01:12 GMT


சுதந்திர தின விழாவையொட்டி 39 பேருக்கு ரூ.1.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சங்கீதா வழங்கினார்.

தியாகிகள்

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன் நாயர், மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், கூடுதல் கலெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். விழாவில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அவர்களுக்கு கலெக்டர் சங்கீதா பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பல்வேறு துறைகளின் சார்பில் 39 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 74 லட்சத்து 23 ஆயிரத்து 437 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள், பொது சேவையில் சிறப்பாக செயலாற்றிய தன்னார்வலர்கள் என மொத்தம் 227 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டன.

காந்தி சிலை

அதன்பின் கேப்ரன் ஹால், ஓ.சி.பி.எம்., அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாலமந்திரம், திருவேடகம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, டி.வி.எஸ்., பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 7 பள்ளிகளை சேர்ந்த 532 மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் கலெக்டர் சங்கீதா, காந்தி மியூசியத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்