கடலூரில் சுதந்திர தின விழாகலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடி ஏற்றினார்387 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

கடலூரில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடி ஏற்றினார்.

Update: 2023-08-15 18:45 GMT


நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாவுக்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி அண்ணா மைதானத்தின் நுழைவு வாயில் முதல் விழா நடக்கும் மைதானம் வரை வாழைகள் மற்றும் கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து காலை 9 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், முகாம் அலுவலகத்தில் இருந்து அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு காரில் வந்தார். அப்போது கலெக்டர் காரின் முன்பும், பின்னாலும் போலீசார் இருசக்கர வாகனங்களில் அணி வகுத்து வந்தனர். தொடர்ந்து காலை 9.05 மணி அளவில், அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு வந்தடைந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வரவேற்றார்.

தேசிய கொடி ஏற்றினார்

இதையடுத்து விழா நடக்கும் மேடைக்கு வந்த கலெக்டர் அருண்தம்புராஜ், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சமாதான புறாக்களையும், மூவர்ண நிறத்திலான பலூன்களையும் பறக்க விட்டார். தொடர்ந்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுடன் திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அப்போது ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் தலைமையில் ஆயுதப்படை போலீசார், தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகள் அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

ரூ.1½ கோடி நலத்திட்ட உதவிகள்

இதையடுத்து வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 169 அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

தொடர்ந்து வருவாய்த்துறை, வேளாண் துறை, தோட்டக்கலை துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, மகளிர் திட்டம், தாட்கோ ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 387 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 68 லட்சத்து 93 ஆயிரத்து 881 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மூவர்ணத்தில் தண்ணீர்

முன்னதாக செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி, மேல்பட்டாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஈக்விடாஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியும், மூவர்ணத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து சிறப்பாக கலைநிகழ்ச்சி நடத்திய பள்ளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மதுபாலன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


சுதந்திர தின விழாவில் திருவதிகை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் மல்லர் கம்ப சாகசம் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் செய்த சாகசங்கள் பார்வையாளர்களை மலைக்க வைத்தது. ஒவ்வொரு சாகசமும் பார்வையாளர்களை கைதட்ட வைத்தது. இதை பார்த்த ஒரு சிலர் மெய்சிலிர்த்து விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். 

விழாவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலுநகரில் உள்ள குளோபல் ஸ்பெஷல் பள்ளி(மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள்) மாணவ-மாணவிகளின் நடனம் நடைபெற்றது. இந்த நடனத்தை மேடையில் இருந்த கலெக்டர் அருண்தம்புராஜ் உண்ணிப்பாக கவனித்து, அவ்வப்போது கைத்தட்டினார். பின்னர் நடனம் முடிந்ததும் விழா மேடையில் இருந்து எழுந்த கலெக்டர் அருண்தம்புராஜ், நடனம் நடைபெற்ற இடத்திற்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு கைகுலுக்கி பாராட்டினார். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமும், அதிகாரிகளும் மாணவர்களை பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்