கோர்ட்டு, ஜெயிலில் சுதந்திர தின விழா

வேலூர் கோர்ட்டு, ஜெயிலில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-08-15 18:07 GMT

வேலூர் கோர்ட்டு, ஜெயிலில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

வேலூர் கோர்ட்டு

வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி என்.வசந்தலீலா தலைமை தாங்கினார். கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி கே.நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார்.

இதில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் மாநில நீதித்துறை அகாடமி சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வேலூர் மாவட்ட அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் சுதந்திர போராட்ட தியாகி சண்முகம் என்பவரின் மகள் நளினிக்கு நிதியுதவி வழங்கினர். மேலும் அவருக்கு ஓய்வூதியம் வழங்க சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மத்திய ஜெயில்

இதேபோல வேலூர் மத்திய ஜெயிலில் நடந்த விழாவுக்கு சூப்பிரண்டு அப்துல்ரகுமான் தலைமை தாங்கினார். சிறை அலுவலர் குணசேகர் வரவேற்றார். சிறை அலுவலர் மோகன்குமார் தொடக்க உரை ஆற்றினார்.

இதில் சிறை மருத்துவ அலுவலர் பிரகாஷ் அய்யப்பன் சுதந்திர தினம் குறித்து பேசினார். டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் சிறப்புரை ஆற்றி தேசியகொடி ஏற்றினார். சிறைவாசிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கைதிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைபோட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவில் சிறை அதிகாரிகள், கைதிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டல அலுவலக வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பொது மேலாளர் கணபதி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்தார். சிறப்பாக பணியாற்றிய தொழில்நுட்ப பணியாளர்கள், பணியாளர்கள், கண்டக்டர்கள், டிரைவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 10, 12-ம் வகுப்பில் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் துணை மேலாளர்கள் பொன்னுபாண்டி (வணிகம்), மோகன் (இயக்கம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புகைப்பட கண்காட்சி

சத்துவாச்சாரி நேதாஜிநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அங்கு சிப்பாய் புரட்சி நினைவு தூண் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு சிப்பாய் புரட்சி மற்றும் சுதந்திர தின போராட்ட வரலாறு குறித்து தலைமை ஆசிரியர் கங்காகவுரி விளக்கி கூறினார். மேலும் அங்கு சுதந்திர பேராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது. குழந்தைகள் பலர் சுதந்திர போராட்ட தியாகிகள் போன்று உடையணிந்து வந்திருந்தனர்.

இதேபோல வேலூரில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்