சுதந்திர தின விழா: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
சுதந்திர தின விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- நாடு வளம்பெற அனைவரும் சாதி-மத வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால், சர்வதேச அளவில் இந்தியா முதன்மை நாடாகவும், இந்திய அளவில் தமிழகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும் விளங்கும் என்பதை தெரிவித்து, அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை அடைந்த நாம் வறுமையில் இருந்தும் விடுதலை அடைய வேண்டும். அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம் நிறைந்த சமத்துவ நாட்டை உருவாக்க இந்த நாளில் உறுதியேற்க வேண்டும்.
கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, சாதி-மத-இன வேறுபாடுகளை கடந்து சமூக நல்லிணக்கத்தோடு இந்தியா வளர்ச்சி பாதையில் பயணத்தில்தான் அனைத்து மக்களின் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும். இந்த சூழல் ஏற்படுவதற்கு தேசியளவில் அரசியல் மாற்றம் வேண்டும். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- நாட்டின் சுதந்திர தின விழாவில், நாட்டிற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம்.
சரத்குமார்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி., மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், வி.கே.சசிகலா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திருநாவுக்கரசர் எம்.பி., தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், தேசிய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜி.ஜி.சிவா, தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் சம்சுதீன், முஸ்லிம் மக்கள் கழக தலைவர் தாஜூதீன், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.