சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
திருச்செந்தூரில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் தக்கார் பிரதிநிதியும் ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.பின்னர் மதியம் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்யாண மண்டபத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது. இதில் திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி கலந்து கொண்டு பக்தர்களுக்கு இலவச வேஷ்டி, சேவைகள் வழங்கி பொது விருந்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் வேலவன், துணை தலைவர் செங்குழி ரமேஷ், கோவில் அலுவலக கண்காணிப்பாளர் சீதாலட்சுமி, விடுதி மேலாளர் சிவநாதன், காயாமொழி கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான செங்குழி ரமேஷ் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, அரசு வக்கீல் சாத்ராக், நகர செயலாளர் வாள்சுடலை, நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நகராட்சி அலுவலகம்
திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதலில் மகாத்மா காந்தி சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி தலைவர் சிவஆனந்தி தேசிய கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். மேலும் திருச்செந்தூர் சாய்பாபா கோவில் சார்பில் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் வேலவன், துணை தலைவர் செங்குழி ரமேஷ், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன், கவுன்சிலர்கள் செந்தில்குமார், முத்துகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள், ஷீரடி சாய்பாபா நிர்வாக அறங்காவலர் செல்வமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பஞ்சாயத்து
வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்தில் தலைவர் எல்லமுத்து தேசிய கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் ஜெ.ஜெ.நகரில் கிராம சபை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கிருஷ்ணராஜா, பஞ்சாயத்து துணை தலைவர் ஜெகதீஸ் வி.ராயன் செயலாளர் பட்டுகனி உள்பட அனைத்து பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
காயாமொழி பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் ராஜேஸ்வரன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பின்னர் கந்தசாமிபுரத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், பஞ்சாயத்து துணை தலைவர் ராஜா, செயலாளர் இசக்கியம்மாள் உள்பட அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க
திருச்செந்தூரில் பா.ஜ.க. சார்பில் சுதந்திர தின விழா பேரணி நடந்தது. இப்பேரணி வீரராகவபுரம் தெருவில் தொடங்கி சன்னதி தெருவில் நிறைவு பெற்றது. பின்னர் அங்குள்ள சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரணார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பா.ஜ.க. மகளிரணி மாநில பொது செயலாளர் நெல்லையம்மாள் தலைமை தாங்கினார். பேரணியை வள்ளியம்மாள் வெங்கடேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பங்குபெற்ற குழந்தைகள் சுதந்திரப்போராட்ட வீரர்களின் வேடமணிந்து கைகளில் தேசியக்கொடி ஏந்தி வந்தே மாதரம் பாடல் பாடியபடி பேரணியாக சென்றனர். நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட துணை தலைவர்கள் செல்வராஜ், சரஸ்வதி, திருச்செந்தூர் நகர தலைவர் நவமணிகண்டன், மகளிரணி தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்
திருச்செந்தூர் நகர காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி சிலைக்கு காங்கிரஸ் மாநில பொதுகுழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன் மாலை அணிவித்தார். பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் வேல்ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு தியாகிகளின் வாரிசுகள் ஜெயந்திநாதன், கார்க்கி ஆகியோர் மாலை அணிவித்தனர். நாராயணபிள்ளை நினைவு கம்பத்தில் தேசிய கொடியை நகர காங்கிரஸ் தலைவர் முருகேந்திரன் ஏற்றினார்.
நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். 8-வது வார்டு மகாராஜன் பிள்ளை நினைவு செடி கம்பத்தில் அருள்மணி கொடி ஏற்றினார். தியாகி சண்முகம்பிள்ளை நினைவு கம்பத்தில் நகர காங்கிரஸ் துணை தலைவர் விஸ்வம் பண்ணையார் கொடி ஏற்றினார்.
நிகழ்ச்சியில், நகர காங்கிரஸ் துணை செயலாளர் அருணாசலம், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் குமுதன், மாவட்ட கலை பிரிவு தலைவர் செண்பகராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி
திருச்செந்தூர் ஸ்ரீசரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் உஷா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஷண்முகப்ரியா தேசிய கொடியேற்றினார். மாணவிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 'எனது பயணம்' என்ற புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் யோகப்ரியா, மதிவதனா, மதுமதி, வெங்கடேஸ்வரி, ஹரிநாராயணி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் சுதந்திர தினம் பற்றி பேச்சு போட்டி மற்றும் கவிதை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில், பட்டதாரி ஆசிரியை குணசுந்தரி நன்றி கூறினார்.