இளைய தலைமுறையினருக்கு தமிழ் இலக்கிய உணர்வை ஊட்ட வேண்டும்: முதல்-அமைச்சர் பேச்சு

இலக்கியம் தான் ஒரு மனிதனை பண்படுத்தும். இளைய தலைமுறையினருக்கு தமிழ் இலக்கிய உணர்வை ஊட்ட வேண்டும் என்று சென்னை இலக்கிய திருவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2023-01-06 23:55 GMT

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் 2022-2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் இலக்கியச் செழுமை மிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு 5 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

அந்த வகையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு பாடலூல் மற்றும் கல்வியியல் கழகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'சென்னை இலக்கிய திருவிழா' ஜனவரி 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை இலக்கிய திருவிழாவின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சென்னை இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

தி.மு.க.வின் ஆட்சிக்காலம் என்பது எப்போதும் தமிழாட்சி காலம்தான். தமிழ்நாட்டில் தி.மு.க. என்ற இயக்கத்தின் ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடந்து வருகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு கொண்ட தமிழருடைய நிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. நூற்றாண்டு கனவான செம்மொழித் தகுதியை தமிழுக்கு பெற்றுத் தந்தது கருணாநிதி என்பதை நாடு மறந்துவிட முடியாது. தலைநகரில் வள்ளுவர் கோட்டமும், கடல் நகரில் 133 அடியில் வள்ளுவர் சிலையும் அமைத்தது. திரும்பிய பக்கம் எல்லாம் திருக்குறளைத் தீட்டியது. தமிழ் வாழ்க என எழுத வைத்தது. தமிழில் வழிபடக்கூடிய உரிமையை பெற்றுத்தந்தது. ஆட்சிமொழியாய் தமிழை முழுமையாக்கியது என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமை, எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிடக் களஞ்சியம் உருவாக்கம், இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது என ஏராளமான தமிழ்க் காப்புத் திட்டங்களை இன்றைய தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்துக்கும் மகுடம் வைத்தாற்போல இலக்கிய திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழ் மாநாடு போல...

நெல்லையில் பொருநை விழா, தஞ்சையில் காவிரி விழா, கோவையில் சிறுவாணி விழா, மதுரையில் வைகை விழா என நடத்தப்பட்டு தலைநகரில் தலைசிறந்த விழாவாக இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த 5 விழாக்களையும் சேர்த்தால் தமிழ்நாட்டு தமிழ் மாநாடு போல இதனைச் சொல்லலாம்.

மொழியைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த இனம்தான் நம்முடைய தமிழ் இனம். திராவிட இயக்கம் அரசியல் இயக்கமாக இருந்தாலும் மொழி காப்பு இயக்கமாகவே தொடக்கம் முதல் இயங்கி வருகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த அரசியல் கட்சியும், இலக்கிய இயக்கமாக இருந்ததில்லை. தி.மு.க. தான் அப்படி வளர்ந்தது. தன்னை வார்ப்பித்துக்கொண்டது.

மொழியைப் பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது. அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும். அதற்காகத்தான் இத்தகைய இலக்கிய விழாக்களை நாம் நடத்துகிறோம். இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வு, தமிழ் இலக்கிய உணர்வை ஊட்டியாக வேண்டும். இலக்கியம் தான் ஒரு மனிதனை பண்படுத்தும்.

உலகப்புத்தக சந்தை

இந்த ஆண்டு முதல் உலகப்புத்தகச் சந்தையை இங்கேயே கண்காட்சியாக நாம் நடத்தப்போகிறோம். உன்னதமான தமிழ்ப்படைப்புகள் அனைத்தும் உலகத்தின் பல மொழிகளுக்கு போக இருக்கின்றன. இந்த நேரத்தில் இத்தகைய படைப்புகள் தமிழர்களால் அதிகம் படிக்கப்பட வேண்டும். அதற்கு இளமைக்காலத்தில் இருந்தே மாணவ சமுதாயத்துக்கு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத ஆர்வத்தை உருவாக்க வேண்டும்.

இலக்கியம் என்பது பேரியக்கமாக மாற வேண்டும். புத்தக கண்காட்சிகள் மாவட்டந்தோறும் பரவி நடப்பதைப் போல இலக்கிய திருவிழாக்களும் மாவட்டந்தோறும் பரவி நடைபெற வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவில் தமிழ் எழுத்தாளர் பவா செல்லதுரை, கேரளாவை சேர்ந்த எழுத்தாளர் பால் சக்காரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். பொது நூலக இயக்குனர் க.இளம்பகவத் வரவேற்புரை ஆற்றினார். இணை இயக்குனர் அமுதவல்லி நன்றி கூறினார்.

4 அரங்குகள்

சென்னை இலக்கிய திருவிழாவையொட்டி அண்ணா நுற்றாண்டு நூலக வளாகத்தில் அரிய பருவ இதழ்கள், நூல்கள், ஆவணங்கள், தமிழகத்தை ஆண்ட மூவேந்தர் காலம் முதல் வெளிவந்த அரிய நாணயங்கள், சென்னையின் வரலாறு சார்ந்த படங்களும் தனித்தனியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இலக்கிய திருவிழாவில் படைப்பு அரங்கம், பண்பாட்டு அரங்கம், பயிலும் அரங்கம், குழந்தைகள் இலக்கிய அரங்கம் ஆகிய 4 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இதில் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், சினிமா பிரபலங்கள் என 100 பேர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள்.

8-ந் தேதி (நாளை) காலை 11 மணி முதல் 12 மணி வரையில் 'தமிழ் சமூகத்தில் பெண்ணியம்' என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி. பேசுகிறார்.

சென்னை இலக்கிய திருவிழா தமிழகத்தின் கலை, பண்பாட்டு மற்றும் மரபினை பிரதிபலிக்கும் விழாவாக அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்