கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு:மேரக்காய் விளைச்சல் பாதிப்பு-விவசாயிகள் கவலை

கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மேரக்காய் விளைச்சல் பாதித்து உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2023-06-11 18:45 GMT

கூடலூர்

கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மேரக்காய் விளைச்சல் பாதித்து உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மலைக்காய்கறிகள்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், ஊட்டி, குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கேரட், பீட்ரூட், காலிபிளவர், முட்டைகோஸ், மேரக்காய் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் விளைகிறது. கூடலூர் பகுதியில் இஞ்சி, குறுமிளகு, காபி, ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட பணப்பயிர்களும் விளைகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நெல், நேந்திரன் வாழை, இஞ்சி உள்ளிட்ட பயிர்கள் மழைக்காலத்தில் பயிரிடப்படுகிறது. தொடர்ந்து கோடை காலத்தில் பாகற்காய், புடலங்காய், அவரைக்காய் உள்ளிட்ட பயிர்கள் பராமரிக்கப்படுகிறது.

விளைச்சல் பாதிப்பு

இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் பாகற்காய், மேரக்காய் பயிர்களை நடவு செய்து விவசாயிகள் கவனித்து வந்தனர். மார்ச் மாதம் பரவலாக மழை பெய்தது. இதனால் பாகற்காய் கொடிகளை நோய் தாக்கியது. தொடர்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகினர். இதேபோல் மேரக்காய் பயிரிட்ட விவசாயிகள் தொடக்க காலத்தில் விளைச்சலுக்கு ஏற்ப வருவாய் ஈட்டி வந்தனர்.

இந்தநிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மேரக்காய் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நோய் பரவி மேரக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தொடர் நஷ்டத்தை சந்தித்து வருவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் மேரக்காய் செடிகளை வைரஸ் நோய் தாக்கியுள்ளது. இதனால் பாகற்காயை தொடர்ந்து மேரக்காய் விவசாயமும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்