அதிகரிக்கும் கொரோனா: தமிழ்நாட்டில் மேலும் 38 பேருக்கு தொற்று
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது.;
சென்னை,
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 344 பேருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதன்படி சென்னை மாவட்டத்தில் 14 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 பேருக்கும், காஞ்சீபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேருக்கும், நீலகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், தர்மபுரி, கன்னியாகுமரி, திருவள்ளூா் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, இன்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.