குமரி மாவட்டத்தில் மலைவாழ் பழங்குடியினர் இடையே அதிகரிக்கும் குழந்தை திருமணம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு

குமரி மாவட்டத்தில் மலைவாழ் பழங்குடியினர் இடைேய குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவெடுத்துள்ளது.

Update: 2023-08-13 22:32 GMT

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் மலைவாழ் பழங்குடியினர் இடைேய குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவெடுத்துள்ளது.

பழங்குடியினர்

குமரி மாவட்டத்தில் மேற்குத் தொடச்சி மலை அடிவாரப்பகுதிகளில் சுருளகோடு, பேச்சிப்பாறை ஆகிய ஊராட்சிகளும், பொன்மனை, கடையாலுமூடு போன்ற பேரூராட்சிகளும் உள்ளன. இந்த பகுதிகளில் வெள்ளாம்பி மலை முதல் செறுகடத்துக்காணி மலை வரை 48 பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் சுமார் 7 ஆயிரம் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆடு, மாடு மேய்த்தல், விவசாயம் போன்ற தொழில் செய்து வருகிறார்கள்.

இதுதவிர தங்களின் மரபு சார்ந்த தொழில்களான காடுகளில் தேன் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் செய்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலும் காடுகளை சார்ந்த நிலையிலேயே நடைபெற்று வந்த இவர்களின் வாழ்க்கை தற்போது பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது.

கல்வி நிலை அதிகரிப்பு

குறிப்பாக பெரும்பாலான குடியிருப்புகளில் கல்வி, சாலை, மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர நிலவுரிமை சட்டத்தின் படி படிப்படியாக நிலஉரிமைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கல்வி கற்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேல்நிலை வகுப்புகளுக்குப் பிறகு உயர் கல்வி செல்லும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மேலும் மக்கள் தங்களின் நிலங்களில் ரப்பர், மிளகு உள்ளிட்ட வருவாய் தரும் பயிர்களை நடவு செய்துள்ளனர். இதனால் பொருளாதார அளவிலும் படிப்படியாக ஏற்றம் கண்டு வருகின்றனர்.

குழந்தை திருமணம்

இவ்வாறு பழங்குடியினர் பல்வேறு படிகளில் முன்னேறி செல்லும் நிலையில் இந்த சமூகத்தில் குழந்தைத் திருமணங்களும் நடைபெற்று வருவதாக சமூக நல ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர். முன்காலங்களில் இங்கு பெருமளவில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வந்த நிலையில் பல்வேறு கட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் குழந்தை திருமணங்கள் குறைந்திருந்தன.

இந்தநிலையில் கொரோனாவுக்குப் பிந்தைய சூழ்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஒவ்வொரு பழங்குடியின குடியிருப்புகளிலும் குழந்தை திருமணங்கள் பல நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, குழந்தை திருமணங்களை தடுக்க சமூக நலத்துறையினரும், மாவட்ட கலெக்டரும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நிலம் அபகரிப்பு

இதுகுறித்து பழங்குடி சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

பழங்குடி சமூகத்தைத் சேர்ந்த குழந்தைகள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் போக்குகள் கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. வெளிபகுதி இளைஞர்கள் பழங்குடி குழந்தைகளையும், பெண்களையும் அவர்களின் நிலங்களை அபரிக்கும் நோக்கில் திருமணம் செய்வதும், பின்னர் அவர்களை கைவிடுவதும் நடைபெற்று வருகிறது. பல பழங்குடி குடும்பங்களில் பெற்றோரின் மதுப்பழக்கம், விழிப்புணர்வு இன்மை உள்ளிட்டவை குழந்தை திருமணங்கள் அதிகரிக்க காரணமாக அமைகிறது.

மறைமுக ஆதரவு

பல பெற்றோர்கள் வயது வந்த பெண்களை தனியாக வீட்டில் பாதுகாக்க அச்சப்பட்டு திருமண வயதை எட்டுவதற்கு முன்பாக திருமணம் செய்து கொடுக்கிறார்கள். குழந்தை திருமணத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மறைமுகமாக ஆதரவு அளிக்கின்றன.

குறிப்பாக திருமண வயதை எட்டும் முன்பு திருமணத்தை பதிவு செய்தல், மகப்பேறு பார்த்தல் போன்றவை விதிகளை மீறி நடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், சமூக நலத்துறையினரும் குழந்தை திருமணத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

இதுகுறித்து பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக்கிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

பழங்குடியினர் இடையே நடைபெற்று வரும் குழந்தை திருமணங்கள் தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பல்வேறு புகார்கள் வந்தன. இதுதொடர்பான செயல்திட்டங்களுடன் கூடிய ஆரோக்கியமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் ஒரு தொண்டு நிறுவனத்தையும் ஈடுபடுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளோம். பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் மத்தியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்