உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படம்

உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படத்தால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2023-05-30 18:45 GMT

"கலப்படம்... கலப்படம்... எங்கும் எதிலும் கலப்படம்... ஆழாக்கு பாலினிலே அரைப்படி தண்ணீர் கலப்படம், அரிசியிலே மூட்டைக்கு அரை மூட்டை கல் கலப்படம், அருமையான நெய்யினிலே சரிபாதி டால்டா கலப்படம், காபி கொட்டையில் புளியங்கொட்டை முழுக்க முழுக்க கலப்படம்...'' என்ற திரைப்பட பாடல் 1953-ம் ஆண்டு வெளிவந்த 'திரும்பிப்பார்' என்ற படத்தில் இடம்பெற்றது.

அந்த பாடல் வரிகள் இன்றளவும் மெய்ப்பிக்கப்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

அந்த அளவுக்கு உணவுப்பொருள் கலப்படம் அதிகரித்து விட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்கு உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், புதிய புதிய உத்திகளை கையாண்டு புதுவிதமான கலப்படத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அதிக லாபம்

கலப்படத்தை 3 வகைகளாக பிரிக்கின்றனர். இயற்கையான கலப்பட பொருட்கள், தெரியாமல் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள், தெரிந்தே சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள்.

இதில் 3-வது வகையான தெரிந்தே சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் தான் இன்று பல உணவு பொருட்களின் தரத்தை குறைக்கின்றன. உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

கலப்படம் செய்பவர்களின் முக்கிய நோக்கம், உணவு பொருட்களின் அளவை அதிகரித்து, அதிக லாபத்தை ஈட்டுவது. அதேபோல் உணவு பொருட்களின் விலையை குறைத்து நுகர்வோரின் கவனத்தை ஈர்த்து, லாபத்தை அதிகரிப்பது. மக்களின் உடல்நலத்தை பற்றி இந்த சுயநலக் கும்பல் கவலைப்படுவது இல்லை. சமூக நலன்பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்வது இல்லை.

உணவில், குளிர்பானத்தில் கலப்படம் என்று அனைத்து பொருட்களுமே தற்போது கலப்படமாக மாறிவிட்டன. சரி, கலப்பட உணவு பொருட்களை சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டதே என்று நினைத்து, மருந்து சாப்பிடச் சென்றால், மருந்திலும் கலப்படம் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

இவ்வாறு அதிகரித்து வரும் உணவு பொருள் கலப்படத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதுபற்றி பொதுமக்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகள் வருமாறு:-

மனிதகுலத்துக்கு மிகப்பெரிய அழிவு

திண்டிவனத்தை சேர்ந்த வக்கீல் சேகர்:-

உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் தங்களது பணியை சரிவர செய்யாததால் வியாபாரிகள், உணவுப்பொருட்களில் கலப்படம் செய்து பொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் பெற நினைக்கிறார்கள். இது ஆபத்தான ஒன்றாகும். பொதுவாக மக்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெயில் கலப்படம் என்பது மிக, மிக கண்டிக்கத்தக்க விஷயமாகும். பொதுமக்கள் எவ்வளவு விழிப்புணர்வோடு செயல்பட்டாலும் கடைசியில் ஏமாந்துதான் போகிறார்கள். உணவுப்பொருட்களில் பெருகிவரும் கலப்படம் என்பது மனித குலத்துக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய செயலாகும். தவறை ஆரம்பத்திலேயே அதிகாரிகள் தடுக்காவிட்டால் கள்ளச்சாராயம் மூலமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அதுபோல் உணவுப்பொருட்களில் கலப்படம் என்பது உணவுகள் விஷமாகி மனித குலம் பாதிக்கப்பட்டு மீண்டும் உலகளவில் பேசாமல் இருப்பதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலப்படமில்லா உணவுப்பொருள்

மேல்மலையனூரை சேர்ந்த இல்லத்தரசி தமிழ்ச்செல்வி:-

உணவுப்பொருட்களில் கலப்படம் என்பது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. முன்பெல்லாம் மளிகைக்கடைகளில் பொருட்கள் வாங்கும்போது நேரடியாக எடை போட்டு தருவார்கள். அதில் ஏதாவது கலப்படம் இருந்தால் நம் கண்முன்னே தெரியும். அதுபற்றி அந்த கடைக்காரரிடம் கூறினால் வெளியிலிருந்து வாங்கும்போதே இதுபோல் இருந்திருக்கலாம் என்றுகூறி வியாபாரம் பாதித்தாலும் அதை நமக்கு கொடுக்க மாட்டார்கள். ஆனால் இன்று எல்லா உணவுப்பொருட்களையும் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வதால் நம்மால் எதுவும் கேட்க முடியாத நிலைமை உள்ளது. அதையும் மீறி கேட்டால் பாக்கெட்டில் வருகிறது, நாங்கள் என்ன திறந்தா? பார்த்தோம் என்று கடைக்காரர்கள் கேட்கும் நிலைக்கு உள்ளது. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. மக்களுக்கு கலப்படமில்லாமல் உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் என ஒவ்வொரு நிறுவனமும் நினைக்க வேண்டும். இன்று ஒரு சில ஓட்டல்களில்கூட கலப்பட எண்ணெயை பயன்படுத்துகின்றனர். இதனால் உணவு சாப்பிடுபவர்கள் பாதிக்கப்படுவார்களே என அவர்கள் நினைக்க வேண்டும்.

கடமைக்காக மட்டுமே

செஞ்சியை சேர்ந்த மல்லிகா:-

உணவுப்பொருட்கள் என்றால் இப்போது முழுவதுமாக கலப்படமாக மாறிக்கொண்டு வருகிறது. முன்பெல்லாம் இயற்கையான உணவுப் பொருட்களை வாங்கி சமைத்து வந்தோம். ஆனால் தற்போது எந்த ஒரு கடைக்கு சென்றாலும் உணவுப்பொருட்களில் கலப்படமாகத்தான் இருந்து வருகிறது. உணவு பாதுகாப்புத்துறை முத்திரையும் அதில் இடப்பட்டுள்ளது. ஆனால் அவையெல்லாம் கடமைக்காக மட்டுமே அந்த உணவுப் பொருட்கள் நிறுவனம் செய்து வருகிறது. கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர், உணவுப்பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும். இதுவரை எங்கள் பகுதியில் எந்தவொரு அதிகாரியும் ஆய்வு செய்ததாக தெரியவில்லை. இயற்கையான அதே நேரத்தில் தரமான உணவுப்பொருட்கள் சாப்பிட்டுதான் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்போது கலப்பட உணவுப்பொருட்களையே சாப்பிடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இயற்கை உணவுப்பொருட்களை உண்டால் மட்டுமே உடலுக்கு நல்லதை ஏற்படுத்தும். ஆகையால் கலப்பட உணவுப்பொருட்களை நிறுத்திவிட்டு இயற்கையான உணவுப்பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.

நடவடிக்கை

விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன்:-

உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் இந்த நவீன உலகத்தில் பல்வேறு கலப்படங்கள் உணவில் முளைத்துவிட்டன. அதற்கு காரணம் பாஸ்ட்புட் போன்ற துரித உணவுகளுக்கு மாறியதுதான். கலப்படத்தின் ஒரு வடிவமானது, உணவுப்பொருளின் அளவை அதிகரிப்பதற்காக, உணவுப்பொருளில் மற்றொரு பொருளை சேர்ப்பதாகும். இதன் விளைவாக உணவுப்பொருளின் உண்மையான தரம் இழக்கப்படுகிறது.

பாலில் தண்ணீர் மற்றும் ஸ்டார்ச் கலப்பதால் வயிறு உபாதைகள் ஏற்படலாம். தேநீரில் செயற்கை நிற மூட்டினால் கல்லீரல் கோளாறுகள் ஏற்படலாம். சர்க்கரையில் சுண்ணாம்புத்தூள், வாஷிங் சோடா மற்றும் யூரியா போன்ற கலப்படங்களால் வயிற்றுகோளாறு மற்றும் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படலாம். மிளகுகளில் உலர்ந்த பப்பாளி விதை கலப்பதின் மூலம் வயிறு மற்றும் தோல் எரிச்சல், கடுமையான வயிறு ஒவ்வாமைகள் உண்டாகும். சமையல் எண்ணெயுடன் கனிம எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் சேர்த்தால் பித்தப்பை, புற்றுநோய் விளைவிக்கும் ஆபத்துகள் உண்டாகும். வெல்லத்தில் சலவை சோடா, சுண்ணாம்புத்தூள் கலப்பதால் வாந்தி, பிற வயிற்றுக்கோளாறுகள் ஏற்படும். தேனில் வெல்லப்பாகு மற்றும் டெக்ஸ்ட்ரோ சொலுஷன் சர்க்கரைப்பாகு ஆகியவை கலப்பதால் வயிறு கோளாறுகள் ஏற்படும், சர்க்கரை வியாதிகள் வரவும் வாய்ப்புகள் உண்டு. பழங்களை செயற்கை முறையில் ரசாயன கல் மூலம் பழுக்க வைப்பதால் வயிற்றுக்கோளாறு, வாந்தி மற்றும் புற்றுநோயை உருவாக்கும். ஐஸ்கிரீம் போன்றவையில் விலங்கு கொழுப்புகளை பயன்படுத்துவதால் நுரையீரல், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகளை பாதிக்கும், பயங்கரமான நோய்கள் ஏற்படுத்தும்.

தரமான பொருட்களை பார்த்து வாங்க வேண்டும்

கள்ளக்குறிச்சி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார்:- சில உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. இதை தவிர்க்க கடைக்கு செல்லும் பொதுமக்கள் தரமான பொருட்களை பார்த்து வாங்க வேண்டும். குறைந்த விலைக்கு கொடுக்கிறார்கள் என தரம் இல்லாத மற்றும் கலப்பட பொருட்களை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சில கடைகளில் கெட்டுப்போன பழங்களை கொண்டு ஜூஸ் போட்டு விற்பனை செய்கிறார்கள். அதனை வாங்கி குடிக்கும் மக்களுக்கு பலவித பாதிப்பு ஏற்படுகிறது. உணவு பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு பொருட்களை வாங்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் உணவு பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்க முடியும்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இல்லை

கள்ளக்குறிச்சி நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி:- தற்போது நாடெங்கும் உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. .குறிப்பாக மிளகு, மிளகாய்த்தூள், கசகசா, கடலை மாவு, கோதுமை மாவு, துவரம் பருப்பு, , சமையல் எண்ணெய், டீ தூள், காபித்தூள் போன்ற பல்வேறு பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களும் வேறு வழியின்றி கலப்பட பொருட்களை பணம் கொடுத்து வாங்கி சமையல் செய்து சாப்பிடுகின்றனர். இதனால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதற்கு காரணம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தனியாக உணவு பாதுகாப்பு அலுவலர் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடைகளில் அடிக்கடி ஆய்வு செய்து கலப்பட பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எனவே இதை தவிர்க்க கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகளை நியமனம் செய்து கடைகளில் அடிக்கடி ஆய்வு செய்து கலப்பட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்