முதுமலை சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
முதுமலை சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்
முதுமலை சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வனவிலங்குகள் நடமாட்டம்
முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு காட்டு யானைகள், புலி, கரடி, கழுதைப்புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.
பெரும்பாலும் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகளை கண்டு வருகின்றனர். மிகவும் அரிதாக தென்படும் புலியை கண்டு ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வனத்துறையின் சவாரி வாகனத்தில் சென்று வனப்பகுதியை பார்வையிடுகின்றனர். ஆனால் மிக அபூர்வமாக மட்டுமே புலி நடமாட்டத்தை காண்கின்றனர். இதனால் புலியை காணாமல் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் தான் அதிகம் உள்ளனர். இந்த நிலையில் முதுமலை சாலைகளில் கடந்த சில வாரங்களாக புலி நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
குறிப்பாக முதுமலையில் இருந்து மசினகுடி செல்லும் சாலையை தினமும் புலிகள் கடந்து செல்கிறது. இதை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் கண்டு ரசித்து வருகின்றனர். இதனை சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் கூறுகையில், கடந்த சில வாரங்களாக முதுமலை பகுதியில் அடிக்கடி புலிகள் சாலைகளை கடந்து செல்வதை காணமுடிகிறது. முதுமலையில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு இணையாக புலிகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. புலியை அருகில் இருந்து காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தனர்.
வனத்துறையினர் எச்சரிக்கை
முதுமலை சாலைகளில் காட்டுயானைகள், புலிகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நிறுத்தக்கூடாது. சாலையோரங்களில் நிற்கும் வனவிலங்குகளை துன்புறத்தக்கூடாது என்று வனத்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.