தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரிப்பு
ஆனைமலையில் தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆனைமலை,
ஆனைமலையில் தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்னை மரங்கள்
ஆனைமலை ஒன்றியத்தில் 23 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தினசரி 5 லட்சம் இளநீர் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தது. இந்தநிலையில் தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரித்து உள்ளது. அவை மரங்களில் அதிகளவு சேதத்தை ஏற்படுத்துகிறது.
வெள்ளை ஈ தாக்குதலுக்கு உள்ளான மரங்களில் மகசூல் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனைமலையில் கடந்த கோடை காலத்தில் 78 சதவீதத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கம் இருந்தது. ஆனால், நாட்டு மரங்களில் தாக்கம் குறைவாக காணப்பட்டது தென்னை மட்டுமின்றி வாழை, கோகோ உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களையும் தாக்கி வருகிறது.
மகசூல் குறைவு
இதனால் விவசாயிகள் மகசூல் குறைவால் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக கவலை அடைந்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் நடப்பாண்டில் ஆனைமலை ஒன்றியம் முழுவதும் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மரங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:- மஞ்சள் நிறம் வெள்ளை ஈக்களை கவரும் என்பதால், தென்னந்தோப்பில் ஏக்கருக்கு 10 மஞ்சள் ஒட்டுப்பொறிகள், ஏக்கருக்கு 2 விளக்கு பொறிகள் வைக்க வேண்டும். என்கார்சியா ஒட்டுண்ணி, பொறி வண்டுகள் போன்ற இயற்கை எதிரிகளை பயன்படுத்த வேண்டும்.
கிரைசோபெர்லா இரை விழுங்கிகளின் முட்டைகளை ஏக்கருக்கு, 400 பயன்படுத்த வேண்டும். தென்னை மரங்களுக்கு இடையே தட்டைப்பயறு, சாமந்தி, சூரியகாந்தி பயிரிடலாம். இந்த முறைகளை கையாண்டு, கோடையில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை குறைக்கலாம். மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தால், வெள்ளை ஈக்கள் தாக்கம் படிப்படியாக குறையும். இவ்வாறு அவர் கூறினார்.