கண்டவேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,400 கன அடியாக அதிகரிப்பு

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

Update: 2022-12-22 12:34 GMT

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது. இதனால் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.

கடந்த 9-ந்தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்கீழ் கடந்த மாதம் 28-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி விதம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு கடந்த வாரம் குறைக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கனஅடியாக வந்தது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.

1,400 கனஅடியாக அதிகரிப்பு

இந்த நிலையில் நேற்று காலை முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,400 கன அடியாக அதிகாரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 34.17 அடியாக பதிவாகியது. 2.877 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கன அடி வீதமும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்