மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து, மாலை வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.