மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு சேலம், நாமக்கல் உள்பட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் சேலம், நாமக்கல் உள்பட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2022-10-13 20:21 GMT

மேட்டூர், 

மேட்டூர் அணை

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் அதிகாலை மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது.

அணை நிரம்பிய நிலையில் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக நேற்று முன்தினம் காலை 5.30 மணி முதல் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று காலை 8 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

மதியம் 12 மணிக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாகவும், தொடர்ந்து 2 மணிக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது. இந்த நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் கருதுகின்றனர்.

12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

இதையடுத்து அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறையின் மேட்டூர் உபகோட்ட உதவி நிர்வாக பொறியாளர் வெளியிட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை செய்திக்குறிப்பில், 'காவிரி பாய்ந்தோடும் மாவட்டங்களில் காவிரி ஆற்றையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்