திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-14 18:45 GMT

திருவட்டார், 

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் காலையில் மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது. மதியத்துக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய கோதையார், குற்றியார், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ேபான்ற இடங்களில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. கோதையாற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் திற்பரப்பு அருவியில் அதிக அளவில் தண்ணீர் ெகாட்டியது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. அவர்கள் பாதுகாப்புடன் அருவியில் குளிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

மலையோர மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து கொண்டு வருகிறது.

இதுபோல் தக்கலை, பூதப்பாண்டி, குழித்துறை, திருவட்டார், சித்திரங்கோடு, வேர்க்கிளம்பி, செருப்பாலூர், பூவன்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை வெளுத்து வாங்கியது. மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை பகுதியில் 79.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பெருஞ்சாணி- 54, சிற்றார்- 1-70.8, சிற்றார் 2- 66.4, மாம்பழத்துறையாறு- 45, புத்தன்அணை- 48.8, நாகர்கோவில்- 14, இரணியல்- 4.6, சுருளோடு- 38.2, கன்னிமார்- 31.8, பூதப்பாண்டி- 15.2, பாலமோர்- 18.4, அடையாமடை- 62.6, ஆணைக்கிடங்கு- 42.2, திற்பரப்பு- 45.8, குருந்தன்கோடு- 16.4, கோழிப்போர்விளை- 35.4, முள்ளங்கினாவிளை- 52.6, முக்கடல் அணை- 37.2, பாலமோர்- 18.4, தக்கலை- 45.2, குழித்துறை- 50, களியல்- 45.8 என பதிவாகி இருந்தது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 43.59 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,087 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 378 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்