ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.;

Update:2022-10-13 18:33 IST

தர்மபுரி,

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு 9,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

நேற்று 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஒகேனக்கல் அருவியில் 90 நாட்களுக்குப் பிறகு கடந்த 4-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்