கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-21 18:39 GMT

கிருஷ்ணகிரி:

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதிகளில் பெய்த கனமழையாலும், தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2.299 கனஅடியாக அதிகரித்தது. தற்போது அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.70 அடிக்கு தண்ணீர் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2,426 கனஅடி தண்ணீர், பிரதான மதகு வழியாகவும், 3 சிறிய மதகுகள் வழியாகவும் திறந்து விடப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை, வருவாய்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கிருஷ்ணகிரி அணையில் தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்வதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அணைக்கு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்