ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.

Update: 2022-10-01 18:45 GMT

ஊட்டி, 

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.

2-வது சீசன்

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது. 2-வது சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 150 ரகங்களை சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. தற்போது அந்த செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. கடந்த மாதம் சீசன் தொடங்கியும், சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது.

தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடந்து முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் ஆயுத பூஜையை ஒட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விடுமுறையை கழிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமானோர் ஊட்டிக்கு வருகை தந்தனர்.

சுற்றுலா பயணிகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி மலர் மாடத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. மேரிகோல்டு, லில்லியம், டையான்தஸ், பால்சம் உள்ளிட்ட மலர் ரகங்களை சேர்ந்த 10 ஆயிரம் பூந்தொட்டிகள் மலர் மாடம் மற்றும் பெரணி இல்லம் அருகே புல்வெளியில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மாடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் மலர்களை தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மலர்கள் பின்னணியில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 2-வது சீசனையொட்டி மலர்கள் பூத்து குலுங்குவதால், பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. இதேபோல் படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் ஊட்டி லவ்டேல் சந்திப்பு முதல் பஸ் நிலையம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் நெரிசலை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்