ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

வார விடுமுறை நாளில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்தனர்.

Update: 2022-06-19 12:30 GMT

ஊட்டி,

வார விடுமுறை நாளில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்தனர்.

கண்ணாடி மாளிகை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இதமான காலநிலை நிலவுகிறது. கோடை விடுமுறை முடிந்து கடந்த 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இருப்பினும், வார விடுமுறை நாளான நேற்று ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்தனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தார்கள்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசித்தனர். மலர்களை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பெரணி இல்லம், கள்ளி செடிகளை பார்வையிட்டனர். அலங்கார வேலிகள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெரிய புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுத்தனர்.

படகு சவாரி

ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். காட்சி மாடங்களில் நின்றபடி ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மலர்கள், அலங்கார செடிகளுடன் கூடிய செல்பி ஸ்பாட் முன்பு குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் படகு இல்ல சாலையில் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.

தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம், கேத்தி பள்ளத்தாக்கு, மேட்டுப்பாளையம், குன்னூர் நகரம், அணை பகுதிகள், மாநில எல்லைகள் உள்ளிட்ட இடங்களை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல் சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா நீர்வீழ்ச்சி, தேயிலை பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது. நடப்பு மாதம் இதுவரை 2 லட்சத்து 200 சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்