இருசக்கர வாகனம், ஆட்டோக்களில் பெட்ரோல் திருட்டு அதிகரிப்பு

இருசக்கர வாகனம், ஆட்டோக்களில் பெட்ரோல் திருட்டு அதிகரித்துள்ளது.

Update: 2022-10-01 21:36 GMT

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

திருச்சி மாநகரில் பெரியகடைவீதியை சுற்றியுள்ள பகுதிகள், உறையூர், கருமண்டபம், பெரியமிளகுபாறை, தென்னூர், பாலக்கரை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வீடுகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால், அவற்றை வீட்டின் முன் சாலையில் நிறுத்துவது வழக்கம். இதேபோல் உறையூர், மார்சிங்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவலர் குடியிருப்பு, காஜாமலை காலனியில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு போன்ற பகுதிகளிலும் குடியிருப்பு முன் சாலையிலேயே இருசக்கர வாகனங்களை நிறுத்தி உள்ளனர்.

பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து தற்போது ரூ.103.06-க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்தநிலையில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருட்டு போவது அதிகரித்துள்ளது. எனவே போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி பெட்ரோல் திருடும் இளைஞர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊர் சுற்றும் இளைஞர்கள்

திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பிரேம்நவாஸ்:- எங்கள் பகுதியில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருட்டுப்போவது அதிகரித்துள்ளது. அரை லிட்டர் பெட்ரோல்தானே, ஒரு லிட்டர் பெட்ரோல்தானே இதற்கு போய் எப்படி போலீசில் புகார் செய்வது என்று அனைவரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இது பெட்ரோல் திருடும் கும்பலுக்கு வசதியாக மாறிவிடுகிறது. வேலையின்றி ஊர் சுற்றும் இளைஞர்கள், பெட்ரோல் விலை உயர்வால் தங்களது இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போட முடியாததால், இரவு நேரங்களில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மற்ற வாகனங்களில் இருந்து தொடர்ந்து பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அவசரத்துக்கு பெட்ரோல் வாங்க வேண்டுமானால் ஒரு கிலோமீட்டர் தூரம் போக வேண்டும். தற்போது பாட்டிலிலும் பெட்ரோல் போடுவதில்லை. இதற்கு போலீசார்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

திருச்சியை சேர்ந்த ஸ்ரீதர் சுவாமிநாதன்:- காஜாமலை காலனி பகுதியில் அரசு ஊழியர் குடியிருப்பில் வாகனங்கள் நிறுத்த வசதி கிடையாது. இதனால் இரவு நேரங்களில் சாலையில்தான் அனைவரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி சிறுவர்களும், இளைஞர்களும் இரவு நேரங்களில் பெட்ரோலை திருடிச்செல்கிறார்கள். அவர்களுக்கு வாகனங்கள் வாங்கி கொடுக்கும் பெற்றோர், பெட்ரோல் நிரப்ப பணம் கொடுப்பதில்லை. தனது மகன் எவ்வாறு வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புகிறான் என்று கண்காணிப்பதும் இல்லை. இதனால்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

காவலர் குடியிருப்பிலும் கைவரிசை

திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரமேஸ்வரன்:- பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மிகவும் அவதி அடைந்து வரும் நிலையில், நாங்கள் வாகனங்களுக்கு நிரப்பும் பெட்ரோலை இரவில் மர்ம ஆசாமிகள் திருடிச்செல்வது வாடிக்கையாகிவிட்டது. இரவில் அவசர சவாரி வந்தால் தேவைப்படும் என்பதால் சற்று கூடுதலாக பெட்ரோல் நிரப்பி வைப்போம். அதையும், சிலர் திருடிச்செல்வதால் காலையில் சவாரிக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. பெட்ரோல் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது பெட்ரோலில் ஆரம்பமாகும் திருட்டு நாளடைவில் பெரிய திருட்டு சம்பவங்களில் அவர்களை ஈடுபட தூண்டும்.

உறையூர் காவலர் குடியிருப்பில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத காவலர் கூறும்போது, எங்கள் குடியிருப்பில் அனைத்து வாகனங்களும் இரவு நேரத்தில் வெளியில்தான் நிறுத்தி இருக்கிறோம். ஒரு பகுதியில் மட்டுமே கண்காணிப்பு கேமரா உள்ளது. கடந்த வாரம் இரவில் பணி முடித்து, இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வீட்டுக்கு வந்தேன். ஆனால் இரவோடு இரவாக 2 லிட்டர் பெட்ரோலையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். யார் திருடியது என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்