கல்லட்டி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு-வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தல்

கல்லட்டி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Update: 2023-05-08 03:30 GMT

ஊட்டி

கல்லட்டி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கல்லட்டி மலைப்பாதை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டி உள்ளதால் காட்டுயானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இதனால் முதுமலை புலிகள் காப்பகம் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

கல்லட்டி மலைப்பாதை 36 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் செங்குத்தான சாலைகளை கொண்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். எனவே வாகனங்களை முதல் மற்றும் 2-வது கியரில் மட்டும் தான் இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி வாகனங்கள் இயக்கப்படுவதால் கல்லட்டி மலைப் பாதையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது.

இதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வெளிமாநில, பிற மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் இந்த மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் மற்றும் அவசர வாகனங்களுக்கும், மசினகுடி வழியாக ஊட்டி வருவதற்கும் மட்டும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கும் இரவு நேரத்தில் அனுமதி கிடையாது.

யானைகள் நடமாட்டம்

இவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு பின்னரும் அவ்வப்போது அந்த பகுதியில் விபத்துகள் நடக்கின்றன. இதன்படி விபத்துகளை தடுக்க அந்த சாலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோடை சீசன் தொடங்கியிருப்பதால் வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களில் படையெடுத்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 ஆயிரம் வாகனங்கள் வந்து சென்றுள்ளன. இந்த நிலையில் தற்போது கோடை மழை நன்றாக பெய்து பசுமை திரும்பி இருப்பதால், சாலையோரங்களில் மான்கள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. 29-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று முன்தினம் மாலை யானை சுற்றி திரிந்தது. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் வனவிலங்குகளுக்கு அருகில் சென்று செல்பி புகைப்படம் எடுக்க வேண்டாம் தேவையில்லாமல் சத்தம் எழுப்ப கூடாது இதை மீறி நடந்து கொள்ளும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்