பட்டுக்கூடுகளின் விலை உயர்வு
நூல் விலை அதிகரிப்பால் பட்டுக்கூடுகளின் விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.680-க்கு விற்பனையாகிறது.;
பட்டுக்கூடுகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தியில் கணிசமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆலங்குடி, வேங்கிடகுளம், அரிமளம், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பட்டுப்புழுக்களை வளர்த்து பட்டுக்கூடுகளை தயாரித்து, அதனை அரசின் அங்காடியில் விற்று வருவாயை பெருக்கி வருகின்றனர். இந்த பட்டுக்கூடுகளில் இருந்து பட்டு நூல் தயாரித்து சேலைகள் உள்ளிட்ட ஜவுளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே அரசின் பட்டுக்கூடு அங்காடி மற்றும் பட்டு நூல் தயாரிப்பு கூடம் உள்ளது. இதில் மாவட்டத்தில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
விலை உயர்வு
இந்த நிலையில் பட்டுக்கூடுகள் கடந்த மாதம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.393-க்கும், அதிகபட்சமாக ரூ.580 வரைக்கும் விற்றது. இந்த நிலையில் தற்போது இதன் விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.680-க்கு விற்கிறது. இதனால் விவசாயிகள் பலர் பட்டுக்கூடுகளை அதிகம் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பட்டுநூலின் விலை உயர்ந்துள்ளதால், பட்டுக்கூடுகளின் விலை உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இங்கிருந்து உடனடியாக பட்டுநூல் தயாரித்து காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா பட்டு பரிமாற்ற அங்காடிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றனர்.