ராமநாதபுரத்தில் எலுமிச்சை விலை உயர்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடைவெயிலின் தாக்கம் எதிரொலியாக எலுமிச்சையின் விலை உயர்ந்துள்ளது.

Update: 2023-05-01 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடைவெயிலின் தாக்கம் எதிரொலியாக எலுமிச்சையின் விலை உயர்ந்துள்ளது.

விைல உயர்வு

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன்காரணமாக பகல் வேலையில் அதிக வெப்ப தாக்கமும், இரவில் வெப்ப புழுக்கமும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள மக்கள் அதிகளவில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை வாங்கி உண்டு வருகின்றனர். குறிப்பாக குளிர்பானங்கள், பழங்கள், இயற்கை பானங்கள் என அவரவர் விருப்பத்திற்கேற்ப வாங்கி செல்கின்றனர். அதிலும் வெயில் காலங்களில் மக்கள் தங்களின் உடல் வெப்பத்தை குறைப்பதற்கு லெமன் ஜூஸ் குடிப்பதைதான் விரும்புகின்றனர்.

இதன்காரணமாக எலுமிச்சையின் தேவை ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்துவிடும். தேவை அதிகரிப்பதால் அதன் விலையும் அதிகரித்து விடுவது வழக்கம். இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் எலுமிச்சையின் தேவை அதிகரித்துவிட்டது. இதனால் நாளுக்கு நாள் எலுமிச்சையின் விலை ராமநாதபுரத்தில் அதிகரித்து வருகிறது.

வெயில் தாக்கம்

மார்ச் மாதத்திற்கு முன்பைவிட தற்போது எலுமிச்சையின் விலை இருமடங்காக உயர்ந்துவிட்டது. ஒரு எலுமிச்சை ரூ.4 முதல் 5 வரை விற்பனையான நிலையில் தற்போது ரூ.6-க்கு குறைந்து விலை இல்லை என்று கராராக விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க மக்கள் எலுமிச்சையை அதிகளவில் வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர். இதுகுறித்து எலுமிச்சை வியாபாரி மணி கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மதுரை போன்ற பகுதிகளில் இருந்துதான் எலுமிச்சை வருகிறது. எலுமிச்சையை பொறுத்தவரை ஒரு மூடையில் 20 சதவீத எலுமிச்சை கழிவாகி விடும். மீதம் உள்ள எலுமிச்சைதான் விற்பனை செய்ய முடியும்.

அதிகரிக்க வாய்ப்பு

கடந்த மாதம் ரமலான் பண்டிகை என்பதால் நோன்பு வைப்பதற்காக அதிகளவில் எலுமிச்சை விற்பனையானது. இதனால் தேவை அதிகமாகி விலை அதிகரித்தது. ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனையானது. தற்போது அதிக வெயில் காரணமாக மக்கள் அதிகளவில் எலுமிச்சை பழங்களை வாங்கி செல்கின்றனர். இதனால் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது. இனி அக்னி நட்சத்திர காலம் என்பதால் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஜூன் மாத இறுதியில்தான் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்