மளிகை பொருட்கள் விலை அதிகரிப்பு

அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.;

Update: 2023-06-10 22:45 GMT

அரசுக்கு 'பட்ஜெட்' எப்படி முக்கியமோ, அதுபோல குடும்பங்களில் இல்லத்தரசிகள் மாதாந்திர வீட்டு 'பட்ஜெட்'டும் மிகவும் முக்கியமானது. 'பட்ஜெட்'டில் எப்போதுமே முதலிடம் என்றால், அது மளிகை பொருட்களுக்கு தான் இருக்கும். மளிகை பொருட்கள் வாங்கி சமையலறையில் இருப்பு வைத்தாலே, இல்லத்தரசிகளுக்கு பாதி நிம்மதி கிடைத்துவிடும்.

அவ்வப்போது மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் ஏற்படும் போதெல்லாம் 'பட்ஜெட்'டில் துண்டு விழும். அப்போது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியே மேலோங்கும். இதனால் சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் அளவும் குறைய தொடங்கும்.

அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த சந்தை வியாபாரி பி.பாண்டியராஜன் கூறியதாவது:-

காரணம் என்ன?

பொதுவாக தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் ஆந்திரா, கேரளா, மராட்டியம் போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களின் வரத்து தான் இங்கு மளிகை பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

உதாரணமாக பருப்பு வகைகள் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்திருக்கிறது. துவரம் பருப்பு விலை (கிலோவில்) ரூ.118-ல் இருந்து ரூ.160 ஆக அதிகரித்துள்ளது. சீரகத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. கடந்த மாதம் ரூ.365-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.540-க்கு விற்பனை ஆகிறது. மிளகு விலை ரூ.50 உயர்ந்துள்ளது.

அரிசி விலை உயர்வு

அரிசியை பொறுத்தவரை 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாதா பொன்னி அரிசி விலை ரூ.900-ல் இருந்து ரூ.1,050 ஆக விலை அதிகரித்துள்ளது. மீடியம் பொன்னி ரூ.1,250-ல் இருந்து ரூ.1,500 ஆக அதிகரிக்கிறது. பச்சரிசி விலை ரூ.1,500 ஆக அதிகரித்திருக்கிறது. பாசுமதி அரிசி (30 கிலோ கொண்ட சிப்பம்) ரூ.3,100-ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை பாமாயில் விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.130 வரை விற்பனையான பாமாயில் படிப்படியாக குறைந்து தற்போது ரூ.85 ஆக குறைந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய அங்காடியில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்/ மொத்த விலையில்)

துவரம் பருப்பு- ரூ.160, சிறுபருப்பு- ரூ.110, உளுந்தம் பருப்பு- ரூ.120, உருட்டு கடலை- ரூ.65 முதல் ரூ.70 வரை, கடலை பருப்பு- ரூ.75, மிளகாய் தூள்- ரூ.430, தனியா தூள்- ரூ.224, மஞ்சள் தூள்- ரூ.156, சீரகம்- ரூ.540, சோம்பு- ரூ.290, கடுகு- ரூ.80, மிளகு- ரூ.540, வெந்தயம்- ரூ.80, ஆட்டா (10 கிலோ) - ரூ.490, மைதா (10 கிலோ) - ரூ.430, சர்க்கரை (50 கிலோ மூட்டை) - ரூ.2,050, வெல்லம்- ரூ.58, புளி- ரூ.90, பூண்டு (சாதா) - ரூ.110, பூண்டு (முதல் ரகம்) - 150, முந்திரி- ரூ.890, திராட்சை- ரூ.250, பாமாயில்- ரூ.85, சன் பிளவர்- ரூ.112, நல்ல எண்ணெய்- ரூ.270, தேங்காய் எண்ணெய்- ரூ.180, டால்டா- ரூ.102, ஏலக்காய்- ரூ.1,700, நீட்டு மிளகாய்- ரூ.315, தனியா- ரூ.120, பச்சை பட்டாணி- ரூ.78, வெள்ளை பட்டாணி- ரூ.68, கருப்பு சென்னா- ரூ.69, சாதா பொன்னி (26 கிலோ மூட்டை) - ரூ.1,050, மீடியம் பொன்னி - ரூ.1,200, முதல் ரக பொன்னி- ரூ.1,500, பச்சரிசி- ரூ.1,500, பாசுமதி அரிசி- ரூ.3,400, பிரியாணி அரிசி- ரூ.2,600, இட்லி அரிசி- ரூ.900.

போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிசந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்