மின் விநியோகம் உயர்வு - தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பாராட்டு
தமிழ்நாட்டில் மின் விநியோகம் உயர்வுக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏ.சி., ஏர்கூலர் போன்ற மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அதன்படி அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக மின் வாரியம் தயார் நிலையில் முன்னேற்பாடுகளை செய்து தட்டுப்பாடின்றி மின் வினியோகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக ஊரகப் பகுதிகளில் மின் விநியோகம் உயர்ந்ததை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. தேசிய சராசரி அளவைவிட மின் விநியோகம் உயர்ந்ததற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய எரிசக்தித்துறை மந்திரி ஆர்.கே.சிங் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார்.
மின் விநியோகம் 2021-22 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மின் விநியோகம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உதவும் என மந்திரி ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.