திருத்தணி வனப்பகுதியில் மயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திருத்தணி வனப்பகுதியில் தற்போது மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விவசாய நிலங்களில் வலம் வருவதை காண முடிகிறது.

Update: 2023-01-30 12:25 GMT

காப்புக்காடுகள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வனசரகத்தில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் காப்புக்காடுகள் உள்ளன. இங்கு மயில், மான், குரங்கு, காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்டவை வசிக்கின்றன. இந்நிலையில் திருத்தணி வனப்பகுதி ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் தினமும் மாலை நேரங்களில் 20-க்கும் மேற்பட்ட மயில்கள் கூட்டமாக சுற்றித் திரிகிறது. காண்போரை கவரும் வகையில் இந்த வண்ண மயில் கூட்டம் வலம் வருகிறது. இவை விளை நிலங்களில் உள்ள தானியங்களை உட்கொண்டு ஆனந்தமாக சுற்றி திரிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக திருத்தணி வனப்பகுதியில் மயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இனப்பெருக்கம் அதிகரிப்பு

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:-மயில்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது என்பது கடினம். அவை பறவை என்பதால் இன்று இங்கிருந்தால் நாளை வேறொரு இடத்தில் இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் மயில்களின் இனப்பெருக்கம் அதிகரித்திருப்பது உண்மைதான். நரி, உடும்பு, காட்டுப்பன்றி போன்றவை குறைந்ததால் மயில்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது.

தேசிய பறவை என்பது மட்டுமின்றி, பட்டியலினப் பறவைகளில் ஒன்றாக உள்ளதால், அவற்றை தாக்குவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. விவசாயிகளின் பயிர்களுக்கு வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டால் வனத்துறையினர் மூலம் உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. எனவே அதை தொந்தரவு செய்யாதபோது தானாகவே அடர்ந்த பகுதிக்குள் ஓடி விடும். மயில்கள் கடக்கும் சாலைப் பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக பயணிப்பது நல்லது என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்