வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, திண்டு்க்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக வைகை அணை நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவாக நிர்ணயம் செய்யப்பட்ட 69 அடியை எட்டியது. மேலும் அணையின் நீர்மட்டத்தை 71 அடி வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று வைகை அணையின் நீர்மட்டம் 69.55 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1,772 கனஅடியாக உள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக மட்டும் 769 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட வரத்து அதிகமாக உள்ளதால் வைகை அணை நீர்மட்டம் ஓரிரு நாட்களில் 71 அடியை எட்டும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். வைகை அணை அதன் முழுக்கொள்ளளவான 71 அடி வரையில் தண்ணீர் தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.