வேலூர் மார்க்கெட்டில் மீன்களின் விலை அதிகரிப்பு

மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் வரத்து குறைந்ததால் வேலூர் மார்க்கெட்டில் மீன்களின் விலை அதிகரிப்பு

Update: 2022-06-19 15:38 GMT

வேலூர்

வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது.

அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில், மினிலாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் விற்பனைக்காக மீன்கள் வரவழைக்கப்படுகின்றன.

பண்டிகை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு மீன்கள் விற்பனையாகும். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15 முதல் கடந்த 14-ந் தேதி வரை மீன்களின் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு மீன் வரத்து குறைவாக காணப்பட்டது. எனவே அனைத்து மீன்களின் விலையும் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் மீன்களின் வரத்து அதிகரித்து, விலை குறைவாக காணப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் வேலூர் மீன்மார்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்ததால் இன்று மீன்களின் விலை அதிகமாகவே காணப்பட்டது.

ஒருகிலோ வஞ்சிரம் ரூ.1,600-க்கும், இறால் ரூ.400-க்கும், சங்கரா ரூ.450-க்கும், நெத்திலி ரூ.300-க்கும், நண்டு ரூ.800-க்கும் விற்பனையானது. மீன்களின் விலை குறைவாக இருக்கும் என்று ஏராளமான பொதுமக்கள் மீன்மார்க்கெட்டிற்கு வந்திருந்தனர்.

விலை உயர்வு காரணமாக அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக மீன்களின் விற்பனை மந்தமாக இருந்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்