பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்தது.

Update: 2023-05-30 23:30 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். அதன்படி நேற்று மாட்டு சந்தை நடந்தது. சந்தைக்கு கோவை மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இங்கிருந்து கேரளாவிற்கு இறைச்சி தேவைக்காக மாடுகளை வாங்கி சென்றனர். மேலும் உள்ளூர் விவசாய பணிகளுக்கும் மாடுகளை விவசாயிகள் வாங்கினார்கள். இதற்கிடையில் வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இப்போதே மாடு விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதனால் கடந்த வாரத்தை விட மாடுகள் வரத்து அதிகரித்து உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி சந்தைக்கு கடந்த வாரம் 2 ஆயிரம் மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில் பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுவதால் மாடுகள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று (நேற்று) 2200 மாடுகள் வரை விற்பனைக்கு வந்தன. கடந்த வாரத்தை விட கூடுதலாக 50 வியாபாரிகள் வந்திருந்தனர்.

நாட்டு பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், காளை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், மொரா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையும், செர்சி ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. பக்ரீத் பண்டிகை முடியும் வரை மாடுகள் விலை குறைய வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்