வடமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பு:சேலத்தில் மளிகைப்பொருட்கள் விலை வீழ்ச்சி
வடமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் சேலத்தில் மளிகைப்பொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அன்னதானப்பட்டி:
மளிகைப்பொருட்கள்
மராட்டியம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் துவரம் பருப்பு, கொண்டைக் கடலை, பச்சைப்பயறு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொள்ளு, சீரகம் உள்பட பல்வேறு மளிகைப் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் வட மாநிலங்களில் இருந்து புதிய மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சேலத்துக்கும் வடமாநிலங்களில் இருந்து மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் மளிகைப்பொருட்கள் வரத்து அதிகரிக்கும் என்பதால், கடந்த சில நாட்களாக வட மாநில மொத்த வியாபாரிகள் இருப்பு வைத்துள்ள மளிகைப்பொருட்களை அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைத்து வருகின்றனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த மளிகை வியாபாரிகள் கூறியதாவது:-
நல்ல மழை
சேலம் லீபஜார், செவ்வாய்பேட்டை, பால்மார்க்கெட், நெத்திமேடு, அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை மளிகைக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வடமாநிலங்களில் இருந்து சீசன் சமயத்தில் பல ஆயிரம் டன் வரை மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு வரும். இங்கு விற்பனைக்கு வரும் பொருட்களை மொத்த விலையில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அதனை சில்லறை விலையில் விற்பனை செய்வார்கள்.
சேலம் லீபஜார், செவ்வாய்பேட்டை மார்க்கெட் பகுதிகளில் இருந்து மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் மளிகைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு வட மாநிலங்களில் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து உள்ளதால், அனைத்து பொருட்களும் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வருகிற பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து புதிய மளிகைப்பொருட்கள் வரத்து வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும். இதன் காரணமாக வட மாநிலங்களில் கைவசம் குடோன்களில் இருப்பில் வைத்திருக்கும் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகைப் பொருட்களை அங்குள்ள வியாபாரிகள் கடந்த சில வாரங்களாக அனைத்து பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
20 சதவீதம் வீழ்ச்சி
இதனால் சேலத்துக்கு மளிகைப்பொருட்களின் வரத்து அதிகரிப்பு காரணமாக பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடந்த மாதத்தை விட இந்த மாதம் 20 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மளிகைப்பொருட்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.