கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 3,147 கனஅடியாக அதிகரிப்பு
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 3,147 கனஅடியாக அதிகரித்துள்ளதால் 5 மாவட்டங்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 2,299 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 2,426 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதனிடையே கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.
2-வது நாளாக தடை
அதன்படி நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,563 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் உள்ள 8 பிரதான மதகுகளில் ஒரு மதகில் இருந்தும், 3 சிறிய மதகின் மூலமும் வினாடிக்கு 3,147 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50.25 அடி தண்ணீர் உள்ளது.
அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறப்பால், தரைப்பாலத்தை மூழ்கடித்து 2 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால், அணைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.