வருமான வரி சோதனை: முன்கூட்டியே தகவல் இல்லை - கரூர் எஸ்.பி தகவல்

வருமான வரி சோதனை குறித்து முன்கூட்டியே தகவல் இல்லை என்று கரூர் எஸ்.பி சுந்தரவதனன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-26 05:46 GMT

கரூர்,

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான காரணம் வெளியாகவில்லை. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெற்ற இடத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் திமுக தொண்டர்களில் ஒருவரை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டனர். பாதுகாப்பு கருதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், கரூரில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை குறித்து முன்கூட்டியே முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று கரூர் எஸ்.பி சுந்தரவதனன் தெரிவித்துள்ளார். சோதனைக்கு முன்பு வருமானவரித் துறையினர் பாதுகாப்பு கேட்பது வழக்கம். வருமான வரித்துறை அதிகாரிகள் சிஆர்பிஎப் வீரர்களையும் அழைத்து வரவில்லை; எங்களுக்கும் தகவல் இல்லை.. என்றும் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்; வருமான வரி சோதனை நடக்கும் 9 இடங்களில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கரூரில் 10 இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை தற்போது 3 இடங்களில் மட்டும் நடைபெற்று வருகிறது. திமுகவினர் வாக்குவாதம் செய்ததால் 7 இடங்களில் சோதனை நடக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்