தமிழகம் முழுவதும் 25 இடங்களில் ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமானவரி சோதனை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தின் தொடர்புடைய 25 இடங்களில் 200 வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-07 22:10 GMT

சென்னை,

சென்னை, வடபழனியை தலைமையிடமாக கொண்டு ஆர்த்தி ஸ்கேன் மையத்தை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கந்தசாமி கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜன் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 45 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் சமீபத்தில் பல்வேறு இடங்களில் புதிய கிளைகளை தொடங்கி உள்ளது. முறையாக வருமானவரி செலுத்தாமல் வருமானவரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

200 அதிகாரிகள்

அதன் அடிப்படையில், இந்த நிறுவனம் கடந்த காலங்களில் தாக்கல் செய்த வருமானவரி கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அத்துடன் நிறுவனத்தின் செயல்பாடுகளையும் வருமானவரித்துறை உன்னிப்பாக கவனித்து வந்தது.

இந்தநிலையில் சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்கேன் மையங்கள் மற்றும் அண்ணாநகரில் உள்ள நிறுவனத்தின் நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அதில் பணியாற்றும் டாக்டர்களின் வீடுகள், கோவில்பட்டியில் உள்ள வீடு உள்ளிட்ட 25 இடங்களில் நேற்று காலை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை பகுதிகளை சேர்ந்த சுமார் 200 வருமானவரித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக வெளிமாநிலங்களில் உள்ள வீடு, அலுவலகங்கள் மற்றும் மையங்களிலும் சோதனை நடந்தது. குறிப்பாக கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி நிறுவனங்களின் உரிமையாளர் கோவிந்தராஜன் வீட்டில் அவரது மனைவி டாக்டர் கோமதியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பு செய்து வருவதாக வந்த தகவல்களின் அடிப்படையில் சோதனை நடந்தது. இதில் கடந்த காலங்களில் இந்த நிறுவனம் செய்த முதலீடுகள், மருத்துவ கருவிகள் கொள்முதல், வருவாய் மற்றும் செலவினங்கள் உள்ளிட்ட பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஒரு சில முக்கிய ஆவணங்கள் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தேவைப்பட்டால் வருமானவரி சோதனை மேலும் 2 நாட்கள் தொடர வாய்ப்பு உள்ளது. தற்போது கணக்கில் காட்டப்படாத ரொக்கம், ஆவணங்களின் மதிப்பு எவ்வளவு என்பது கூற இயலாது. வருமானவரி சோதனை முற்றிலும் நிறைவடைந்தவுடன்தான் பறிமுதல் செய்யப்பட்ட, சொத்துக்களின் ஆவணங்கள் மற்றும் ரொக்க நிலவரங்கள் தெரியவரும்.

மேற்கண்ட தகவல்களை வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு உயர் அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்