தமிழகத்தில் 80 இடங்களில் வருமானவரி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்வதற்காக பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரையடுத்து தமிழகத்தில் 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.
சென்னை,
தமிழகத்தில் பொது வினியோக திட்டத்திற்கு (ரேஷன் கடைகளுக்கு) பாமாயில், பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை சில நிறுவனங்கள் வினியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு வந்த ரகசிய புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சென்னை, மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள அருணாச்சலம் இம்பெக்ஸ் என்ற பெயரில், பருப்பு, எண்ணெய் பொருட்கள் உள்பட உணவுப்பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனம், தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் டால் மில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டகரேடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட், தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி அண் கோ உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடு தொடர்புடைய இடங்கள் என தமிழகம் முழுவதும் 80 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்தது.
ரேஷன் கடைகளுக்கு வினியோகம்
இதுகுறித்து வருமானவரித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
தமழக அரசின் பொது வினியோக திட்டத்திற்கு (ரேஷன் கடைகளுக்கு) சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்பட உணவுப்பொருட்களை வினியோகிக்க சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதில் அருணாச்சலம் இம்பேக்ஸ் மற்றும் இண்டகரேடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் எனும் இரு நிறுவனங்கள் கடந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பிற்கு உணவு பொருட்களை வினியோகம் செய்த நிறுவனம் என கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையின்போது, ரூ.1,297 கோடி செலவில், 2.15 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் வெல்லம், புளி உள்ளிட்ட பொருட்கள் தரமில்லாதது குறித்து குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சோதனை தொடரும்
அதேபோல் இந்தியாவுக்கு இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பாமாயில், விற்பனை செய்யப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்து உள்ளன. அதேபோல் பாமாயில் விற்பனையில் முறையான கணக்கு வழக்குகள் பின்பற்றப்படாமல் இருப்பதாகவும், சில நிறுவனங்கள் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து உள்ளதாகவும் புகார்கள் வந்தன. இதன் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட ஒரு சில நிறுவனங்களின் கணக்குகளை சரிபார்க்கும் வகையில் வருமானவரி சோதனையில் ஈடுபட்டு உள்ளோம். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இது தொடர்பான விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் வருமானவரி சோதனை தொடர்ந்து நடக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சோதனையில் சுமார் 400 அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். பணம் எவ்வளவு கைப்பற்றப்பட்டு உள்ளது? கைபற்றப்பட்டுள்ள ஆவணங்களின் மதிப்பு எவ்வளவு?, வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை எவ்வளவு? என்பது குறித்த தகவல்கள் முழுமையாக சோதனை முடிந்த பின்னர் தான் தெரியவரும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
ரூ.500 கோடி முறைகேடு
பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதல் செய்ததில் ரூ.500 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் அப்போது குற்றம் சாட்டி இருந்தன. இந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வருமானவரி சோதனை நடத்தப்பட்ட ஒரு சில நிறுவனங்களில் இருந்து கடந்த ஜனவரியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால் இந்த நிறுவனங்களின் மீதுதான் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து பொங்கல் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு தரமற்ற பொருட்களை வழங்கியதாக இந்நிறுவனங்களுக்கு ரூ.3.75 கோடி அபராதம் விதித்து தமிழக அரசு அப்போது உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.