ஊட்டி, கூடலூரில் தொடர் மழை: மாயார் ஆற்றில் தரைப்பாலம் உடைந்தது-சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி, கூடலூரில் தொடர் மழை காரணமாக சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மாயார் ஆற்றின் தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

Update: 2022-07-06 12:37 GMT

ஊட்டி

ஊட்டி, கூடலூரில் தொடர் மழை காரணமாக சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மாயார் ஆற்றின் தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

தென் மேற்கு பருவமழை

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை பெய்யும். இந்த வருடம் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக ஜூன் 2-வது வாரத்தில் தொடங்கியது. இதற்கிடையே தென்மேற்கு பருவலை தீவிரம் அடைந்து உள்ள நேரத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி உள்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே நீலகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

இதற்கு ஏற்றார் போல் நேற்று முன்தினம் முதல் பகல் மற்றும் இரவு நேரங்களில் முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதற்கு இடையே நாள் முழுவதும் சாரல் மலையும் அவ்வப்போது லேசாக கனமழையும் பெய்து வருகிறது.

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

இதனால் நேற்று முன்தினம் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்களின் கடும் அவதி அடைந்தனர். பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், குந்தா, பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். இதனால் மாணவ -மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு வரும் பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி வெளியே வருகின்றனர். தொடர் மழை அணைகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் ஊட்டியில் இருந்து அகலார் செல்லும் சாலையில் சின்கோனா என்ற இடத்தில் ரோட்டின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதன்பேரில் தீயணைப்பு ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். இதன் பின்னர் போக்குவரத்து பாதிப்பு சீரானது.

கனமழை காரணமாக கூடலூர் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முதுமலை தெப்பக்காடு பகுதியில் மாயாறு ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் தெப்பக்காடு பகுதியில் உள்ள லைட்பாடி, ஆனைப்பாடி ஆதிவாசி மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 1 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தரைப்பாலம்

இது குறித்து ஆதிவாசி மக்கள் கூறும்போது, மாயார் ஆற்றைக் கடப்பதற்காக ஆங்கிலேயர் கால இரும்பு பாலம் இருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிய பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கியது. தொடர்ந்து பழைய பாலம் அகற்றப்பட்டு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பணி தொடர்ந்து நடைபெறாததால் தண்ணீரில் தரைப்பாலம் அடித்து சென்று விட்டது. இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க பாலம் கட்டுமான பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடப்பட்டது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இன்னும் சில மாதங்கள் மழை தொடர்ந்து பெய்யும். அப்போது ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் முதுமலை- மசினகுடி இடையே போக்குவரத்து துண்டிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆறுகளில் வெள்ளபெருக்கு

பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, கரியசோலை, தேவாலா சேரம்பாடி, எருமாடு, தாளூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி, சோலாடி ஆறுகள் மற்றும் நீரோடைகளிர் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தொடர் மழை காரணமாக அடிக்கடி மின்தடை மற்றும் பி.எஸ்.என்.எல். சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் இடைவிடாமல் மழை பெய்தது.

இதனால் விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. குறிப்பாக எருமாடு வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இந்தநிலையில் பொன்னானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதுபற்றி அறிந்ததும்பந்தலூர் தாசில்தார் நடேசன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் தேவராஜ் மற்றும் அதிகாரிகள் பொன்னானி ஆற்று பகுதியை ஆய்வு நடத்தினார்கள். அப்போது பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கடும் குளிர்காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலையாக 15 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 12 டிகிரி செல்சியசும் பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்