தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதை அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-09-23 20:27 GMT

அருவிகளில் தண்ணீர்

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், ஆனைமடுவு, ஆத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெய்து வரும் தொடர் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளர்வதுடன், நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் ஏற்காடு மலைப்பாதையில் 3 மற்றும் 4-வது கொண்டை ஊசி வளைவு, 40 அடி பாலம் ஆகிய பகுதிகளில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

இதனால் ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர். மேலும் அந்த அருவிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகளை குடும்பத்துடன் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். பலர் அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனர். ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பெத்தநாயக்கன்பாளையத்தில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

தலைவாசல்-19, ஆனைமடுவு-18, ஆத்தூர்-9.40, சங்ககிரி-7.40, தம்மம்பட்டி-7, ஏற்காடு-1.

Tags:    

மேலும் செய்திகள்