நந்திவரம் பகுதியில் தொடர்மழையால் 3 மின்கம்பங்கள் முறிந்தன - மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்பு
நந்திவரம் பகுதியில் தொடர்மழையால் 3 மின்கம்பங்கள் முறிந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.;
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, நந்திவரம், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், காரணைப்புதுச்சேரி, வண்டலூர், கொளப்பாக்கம், கண்டிகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் இரவு முதல் விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்தது. சில சமயங்களில் பலத்த காற்று வீசியது.
இதன் காரணமாக நந்திவரம் நாராயணபுரம் பகுதியில் உயர் அழுத்த மின்சார கம்பிகள் செல்லும் 3 மின்கம்பங்கள் முறிந்தன. அப்போது பொதுமக்கள் யாருக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. நந்திவரம் பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். இதனை தொடர்ந்து மின்கம்பங்கள் விழுந்த பகுதிக்கு கூடுவாஞ்சேரி மின்வாரிய ஊழியர்கள் அந்த இடங்களில் புதிய கம்பங்கள் நட்டு மின்சார வயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை-திருச்சி, மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சாலையில் சிறிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் சாலைகள் கடும் சேதம் ஏற்பட்டு ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
மேலும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வழக்கமாக கனமழை காரணமாக தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.