காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.

Update: 2022-08-16 23:31 GMT

சென்னை,

அண்மையில் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்த 22-வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் கமல், டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் அணி பிரிவு, கலப்பு இரட்டையர், ஒற்றையர் பிரிவுகளில் தங்கப்பதக்கமும், ஆண்கள் இரட்டையரில் வெள்ளிப்பதக்கமும் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றதற்காக உயரிய ஊக்கத்தொகையாக ரூ.1 கோடியே 80 லட்சமும், டேபிள் டென்னிசில் ஆண்கள் அணிகள் பிரிவில் தங்கம், இரட்டையரில் வெள்ளி மற்றும் ஒற்றையரில் வெண்கலம் என மொத்தம் 3 பதக்கங்களை கைப்பற்றிய சத்தியனுக்கு ரூ.1 கோடியும், ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையரில் 2 வெண்கல பதக்கங்கள் வென்ற சவுரவ் கோஷலுக்கு ரூ.40 லட்சமும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகா பலிக்கலுக்கு ரூ.20 லட்சமும் மற்றும் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்கள் 5 பேருக்கு மொத்த ஊக்கத்தொகையாக ரூ.51 லட்சமும் என மொத்தம் 3 கோடியே 91 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

மேலும், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பெண்கள் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் மற்றும் பெண்கள் குழு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பவானிதேவிக்கு ஊக்கத்தொகையாக ரூ.35 லட்சத்துக்கான காசோலையையும், இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்ற செஸ் வீரர் பிரணவ் வெங்கடேசுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்