அனைத்துத்துறைகளிலும்ஆண்களுக்கு நிகராக சமவாய்ப்பை பெற்று சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்கல்லூரி மாணவிகளுக்கு கலெக்டர் பழனி அறிவுரை
அனைத்துத்துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சமவாய்ப்பை பெற்று சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கல்லூரி மாணவிகளுக்கு கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.
ஊக்கத்தொகை
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 2-ம் கட்டமாக, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நேற்று சென்னையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்றது.
கலெக்டர் வழங்கினார்
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்துகொண்டு மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம். அட்டையை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 4,174 மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 8 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது 2-ம் கட்டமாக 72 கல்லூரிகளில் படிக்கும் 3,222 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
அறிவுரை
அரசு பள்ளிகளில் மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் மதிய உணவு, இலவச சீருடை, புத்தகம், விலையில்லா சைக்கிள் போன்றவை வழங்கப்பட்டு வருவதால் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இதுபோன்ற திட்டங்கள் கல்லூரிகளில் இல்லாத காரணத்தால் மாணவிகள் பெருமளவில் கல்வி கற்க முடியாத சூழ்நிலை இருந்து வந்ததை அறிந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர், கிராமப்புற மாணவிகள் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே 'புதுமைப்பெண் திட்டம்" செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற மாணவிகள் பெருமளவில் தற்போது ஆர்வத்துடன் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஊக்கத்தொகையை மாணவிகள், நல்ல முறையில் பயன்படுத்தி நன்கு கல்வி கற்று அனைத்துத்துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சமவாய்ப்பினை பெற்று சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் தனலட்சுமி, கலைச்செல்வி, சங்கீதஅரசி, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் ராஜம்மாள், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், நகரமன்ற கவுன்சிலர்கள் சங்கர், கோமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.