சேலம் புதிய பஸ் நிலையத்தில் திறப்பு விழா காணாத பசுமை வெளிப்பூங்கா-பயன்பாட்டுக்கு வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு

சேலம் புதிய பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வெளிப்பூங்கா இன்னும் திறப்பு விழா காணாமல் உள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வருமா? என்று பயணிகளிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Update: 2023-01-11 22:57 GMT

புதிய பஸ்நிலையம்

சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாமக்கல், திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, ஓசூர், சிதம்பரம், கடலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் இரவு, பகல் என்று பாராமல் எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் பஸ் நிலையத்திற்குள் பொழுது போக்கு அம்சம் என்று பார்த்தால் எதுவும் கிடையாது. நடைபாதைகளில் பூக்கள், காலனி, செல்போன் கவர் போன்ற கடைகள் முளைத்துள்ளதால் பயணிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலைமை உள்ளது.

பசுமை வெளிப்பூங்கா

இந்த நிலையில் புதிய பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் உள்ளே செல்லும் இடத்தில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வெளிப்பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் சிறுவர், சிறுமிகள் விளையாடுவதற்கு உபகரணங்கள், பெரியர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை நேரங்களில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பூங்காவிற்குள் பூச்செடிகளும் உள்ளன. ஆனால் பூங்கா அமைத்து ஒரு வருடம் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே, பசுமை வெளிப்பூங்காவை விரைந்து திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திறக்க நடவடிக்கை

புதிய பஸ்நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வரும் கண்ணன்:-

சேலம் புதிய பஸ்நிலையத்திற்கு வரும் வெளியூர் பயணிகள் இந்த பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுக்கும் வகையிலும், சிறுவர், சிறுமிகள் விளையாடும் வகையிலும் கட்டப்பட்டது. ஆனால் ஓராண்டு ஆகியும் பசுமை வெளிப்பூங்கா திறக்கப்படவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், விரைவில் திறக்கப்படும் என்று மட்டுமே பதில் கூறுகிறார்கள். தற்போது பூங்கா முன்பு வாடகை கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே, கட்டி முடித்து ஓராண்டு ஆகியும் திறக்கப்படாமல் உள்ள இந்த பசுமை வெளிப்பூங்காவை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரம் இல்லாமல்...

பெட்டிக்கடை நடத்தி வரும் மாரியப்பன்:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பஸ்நிலையம் அருகே நடந்த அரசு பொருட்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் இந்த பசுமை வெளிப்பூங்காவும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் திடீரென பூங்கா திறப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு பூங்கா திறக்கப்படவில்லை.

தற்போது பூங்காவில் குப்பை, கழிவுகள் சேர்ந்து சுகாதாரம் இல்லாமல் காணப்படுகிறது. அங்கு தண்ணீர் வசதியும் இல்லை. வெளியூர் பயணிகள் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருக்காமல் இந்த பூங்காவிற்கு வந்து ஓய்வு எடுக்கலாம். அங்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் அமர்ந்து சாப்பிடலாம். ஆனால் எதற்காக பூங்கா திறக்காமல் இருக்கிறது என்று தெரியவில்லை. எனவே, புதிய பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பசுமை வெளிப்பூங்காவை திறக்க வேண்டும்.

பழுதடைந்து வருகிறது

பெரமனூரை சேர்ந்த சுதாகர்:-

பொதுமக்களின் வசதிக்காக பசுமை வெளிப்பூங்கா கட்டப்பட்டது. ஆனால் அரசியல்வாதிகளுக்காக இந்த பூங்கா திறக்காமல் காத்திருக்கிறது. திறந்த வெளியில் இருப்பதால் வெயில் சமயத்தில் அமர முடியாது. எனவே, பூங்காவின் ஒரு புறத்தில் மேற்கூரை அமைக்கலாம். சிறுவர், சிறுமிகள் விளையாடுவதற்கு அமைக்கப்பட்ட உபகரணங்களை சிலர் எடுத்து சென்றுவிட்டனர். பூங்கா திறப்பு விழா காணாமலேயே பழுதடைந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள், மெத்தனபோக்கை கைவிட்டு உடனடியாக பசுமை வெளிப்பூங்காவை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயணிகள் எதிர்பார்ப்பு

சேலம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களின் நலனுக்காவும், வசதிக்காகவும் பல்வேறு திட்டப்பணிகள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முடிவுற்ற எந்த பணியாக இருந்தாலும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

எனவே, புதிய பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பசுமை வெளிப்பூங்காவை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பயணிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்