அய்யர்பங்களாவில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு:அபராதம் விதிப்பது குறித்து எவ்வித இலக்கும் நிர்ணயிக்கவில்லை

மதுரை அய்யர்பங்களாவில் புதிய போக்குவரத்து சிக்னல் நேற்று திறக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து அபராதம் விதிப்பது குறித்து எவ்வித இலக்கும் நிர்ணயிக்கவில்லை என்று போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.

Update: 2023-08-28 21:03 GMT


மதுரை அய்யர்பங்களாவில் புதிய போக்குவரத்து சிக்னல் நேற்று திறக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து அபராதம் விதிப்பது குறித்து எவ்வித இலக்கும் நிர்ணயிக்கவில்லை என்று போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.

புதிய சிக்னல் திறப்பு

மதுரை நத்தம் ரோடு நாராயணபுரம் அடுத்த அய்யர்பங்களா சந்திப்பில் புதிய போக்குவரத்து சிக்னல், போக்குவரத்து அவுட்போஸ்ட் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. இதில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமை தாங்கி அதனை திறந்து வைத்தார்.

மேலும் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தலைகவசம் (ஹெல்மெட்) அணிந்து மாணவ, மாணவிகள், போலீசார், பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தலைகவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அதன் அவசியத்தை வலியுறுத்தி புதிய தலைகவசத்தை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை கமிஷனர் குமார், உதவி கமிஷனர்கள் செல்வின், மாரியப்பன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், கார்த்திக், ரமேஷ்குமார், தங்கமணி, நந்தகுமார், பஞ்சவர்ணம், எஸ்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைகவசம் அணியாமல்...

பின்னர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாலையில் உயிரிழந்தவர்களின் 60 சதவீதம் பேர் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தான். 30 சதவீதம் பேர் பாதசாரிகள். இதனை நாம் சரி செய்து விட்டால் 90 சதவீதம் உயிரிழப்பை தடுக்கலாம். அதனை கண்டறிந்து நிவர்த்தி செய்ய தற்போது சாலை விபத்துகள் அதிகம் நடந்துள்ள முக்கிய இடங்களில் (ஹாட் ஸ்பார்ட்) இந்த விபத்துகள் நிகழ வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் இருசக்கர வாகன விபத்துகளில் தலைகவசம் அணியாமல் செல்வதால் 87 சதவீதம் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு தலைகவசம் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை அறிய முடியவில்லை. மேலும் தலைகவசம் அணியாமல் செல்பவர்களில் 70 சதவீதம் முன்னால் அமர்ந்து வண்டி ஓட்டுபவர்கள் என்றும், 30 சதவீதம் பேர் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் என்று கண்டறிந்து உள்ளோம்.

அபராத இலக்கு

நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது குறித்தும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் போக்குவரத்து அபராதம் விபத்து குறித்து எவ்வித இலக்கும் நிர்ணயிக்கவில்லை. முக்கிய நோக்கம் சாலையில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அதனை மீறும் போது அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்