திசையன்விளையில் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழா சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
திசையன்விளையில் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்
திசையன்விளை:
திசையன்விளையில் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.
புதிய தாலுகா அலுவலகம் திறப்பு
திசையன்விளை கால்நடை மருத்துவமனை அருகில் ரூ.3 கோடியே 5 லட்சம் செலவில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் புதிய தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய தாலுகா அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு குத்துவிளக்கு ஏற்றி வாழ்த்தி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்மார்ட் வகுப்பறைகள்
ஆங்கிலவழி பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டி கொடுக்கப்படும்.
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு எனது சொந்த நிதியிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் பிற நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியில் இருந்தும் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தாசில்தார் செல்வகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பத்மபிரியா, வருவாய் ஆய்வாளர் துரைசாமி, திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கமலா சுயம்புராஜன், குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ், தொழில் அதிபர் தங்கையா கணேசன், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.