காமராஜர் புதிய வெண்கல சிலை திறப்பு
ஆலங்குளத்தில் காமராஜர் புதிய வெண்கல சிலை நேற்று திறக்கப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் காமராஜர் புதிய வெண்கல சிலை நேற்று திறக்கப்பட்டது.
காமராஜர் சிலை
தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆலங்குளம் பஸ் நிலையம் எதிர்புறமுள்ள காமராஜர் சிலை அகற்றப்பட உள்ள நிலையில் பஸ் நிலையம் கீழ்புறம் புதிய சிலையை அமைப்பதற்கு அரசு இடம் ஒதுக்கீடு செய்தது. அந்த இடத்தில் புதிய வெண்கல சிலை அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடந்தது.
முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் காமராஜ், ஆலங்குளம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜான்ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர் சாலமோன் ராஜா வரவேற்று பேசினார். எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), பழனி நாடார் (தென்காசி), மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், மூத்த வழக்கறிஞர் பாலகணேசன், ஒன்றிய கவுன்சிலர் எழில்வாணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்கள் திறந்து வைத்தனர்
காமராஜரின் புதிய வெண்கல சிலையை ஆலங்குளம் டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் திறந்து வைத்தனர். பின்னர் ஆலங்குளம் காமராஜர் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆலங்குளம் மார்க்கெட்டில் அமைந்துள்ள அரசடி விநாயகர் கோவிலில் இருந்து 121 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காமராஜர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர். மேலும் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம் மற்றும் மேளதாளத்துடன் ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமையில் 121 முளைப்பாரி கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பெண்களுக்கு மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காமராஜர் சிலை அமைய நிதி வழங்கிய ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதி தொழிலதிபர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
விழாவில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு கமிட்டி பொருளாளர் பர்வீன்ராஜ், தொழிலதிபர் மணிகண்டன், வியாபாரிகள் சங்க தலைவர் சண்முகசுந்தரம், நகர ஓட்டல் அதிபர் சங்க தலைவர் உதயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் காங்கிரஸ் வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம் நன்றி கூறினார். இரவில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலங்குளம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.