கட்டணமில்லா மகளிர் பஸ் தொடக்கவிழா
ஒடுகத்தூர் பஸ்நிலையத்தில் கட்டமில்லா மகளிர் பஸ் தொடக்கவிழா நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
ஒடுகத்தூர் பஸ்நிலையத்தில் கட்டமில்லா மகளிர் பஸ் தொடக்கவிழா நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
தொடக்கவிழா
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், கனகராஜ், வேலூர் அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் பொன்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் கணபதி வரவேற்று பேசினார்.
அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் வண்ணா தாங்கல் பகுதியில் மாவட்ட ஊராட்சி திட்ட குழு நிதியிலிருந்து கருணாநிதி பெயரில் புதிய பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்தார். மடையாப்பட்டு பகுதியில் துணை மின் நிலையத்தை தொடங்கி வைத்த அவர்கள், கொடியசைத்து பஸ் போக்குவரத்தையும் தொடங்கிவைத்து பேசினர்.
அடுக்குமாடி குடியிருப்பு
நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசுகையில், ஒடுகத்தூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆம்பூர், குடியாத்தம் உள்ளிட்ட நகரங்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும். மேலும் ஒடுகத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு இல்லாதவர்களுக்கு அரசு புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி வருபவர்களுக்கும் வன அலுவலகம் அருகே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான இடத்தையும் தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தார்.
சேர்ப்பாடி பகுதியில் நிரந்தரமான மயான இடம் இல்லாததால் ஆற்றங்கரை ஓரம் அரசுக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து அங்கு மயானம் அமைக்கப்படும் என்றும், அதற்கான அளவீடு பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அணைக்கட்டு துணை தாசில்தார் ராமலிங்கம், வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், ஒடுகத்தூர் நகர செயலாளர் பெருமாள் ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் சத்யாவதி பாஸ்கரன், அணைக்கட்டு ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.