விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழா... பிரதமர் மோடி வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம்
விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருவதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலைய மேம்பால பாதையும் 25 நிமிடங்கள் மூடப்படுகிறது.;
பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) சென்னைக்கு வருகை தந்து சென்னை விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கிறார். சென்டிரல் ரெயில் நிலையத்தில் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அத்துடன் மெரினா காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறார்.
எனவே இந்த விழாக்கள் நடைபெறும் இடங்களை சுற்றியுள்ள சாலைகளிலும், ஐ.என்.எஸ். அடையார் முதல் சென்டிரல் ரெயில் நிலையம் வரையிலும், சென்டிரல் ரெயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலும் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்புள்ளது.
* பிரதமர் விவேகானந்தர் இல்லத்துக்கு வருகை தரும்போது காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள் ஆர்.கே. சாலைக்கு திருப்பி விடப்படும். அங்கிருந்து நடேசன் சாலை சந்திப்பில் ஐஸ் அவுஸ், ரத்னா கபே, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பு வழியாக தொழிலாளர் சிலை அல்லது அண்ணாசாலைக்கு வலதுபுறம் திரும்பலாம்.
* போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் வானங்கள் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலையில் அண்ணாசாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும். இந்த மாற்று பாதையானது மாலை 4 முதல் மாலை 6 மணி வரை செயல்படுத்தப்படும்.
வணிக வாகனங்களுக்கு மதியம் 2 முதல் இரவு 8 மணி வரை இடையிடையே திசைமாற்றம் செயல்படுத்தப்படும். அதன் விவரம்:-
* அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
* ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் திருப்பி அண்ணாநகர், புதிய ஆவடி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
* வெளியேறும் திசையில் செல்லும் வாகனங்கள் என்.ஆர்.டி.புதிய பாலத்தில் இருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்டான்லி சுற்று, மின்ட் சந்திப்பு, மூலகொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப், வியாசர்பாடி வழியாகத் திருப்பி விடப்படும்.
* ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹண்டர் ரோடு, ஈ.வி.கே. சம்பத் சாலை வழியாக ஈ.வி.ஆர். சாலையை அடையும் வகையில் திருப்பி விடப்பட்டு நாயர் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.
* லேங்கஸ் கார்டன் சாலையில் இருந்து காந்தி இர்வின் மேம்பாலத்திற்கு வரும் கனரக வாகனங்கள் ஈ.வெ.ரா. சாலையை அடைய உடுப்பி பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.
* கிரீன்வேஸ் சாலையில் இருந்து வரப்படும் கனரக வாகனங்கள் மந்தைவெளி நோக்கி திருப்பி விடப்படும்.
* அதிக பாதுகாப்பை கருத்தில் கொண்டு உழைப்பாளர் சிலை முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலான மெரினா சாலையில் கூடுதல் ஆய்வு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். முன்னதாக அவர், விமான நிலைய புதிய முனையத்தை சுற்றிப்பார்க்கிறார்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு புறப்பாடு முனையங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு மேம்பாலத்தில் செல்ல பகல் 2.50 மணியில் இருந்து 3.15 வரை சுமார் 25 நிமிடங்கள் தடை விதிக்கப்படுகிறது. அந்த நேரம் மேம்பால பாதை மூடப்படுகிறது.
எனவே இந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்துக்கு செல்ல திட்டமிட்ட பயணிகள் முன்கூட்டியே சென்றடைய வேண்டும். பயணிகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் வருகை பகுதியில் இறங்கி, தரை வழியாக சென்று உள்நாட்டு மற்றும் பன்னாட்டு புறப்பாடு பகுதிக்கு 'லிப்ட்' வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த நேரத்தில் போக்குவரத்து மாற்றத்துக்கு பயணிகள் முழுஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
பிரதமர் மோடி பல்லாவரம் வருவதையொட்டி ஜி.எஸ்.டி. சாலையில் பிற்பகல் முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
* பல்லாவரத்தில் இருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்படுகிறது.
* ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம், குரோம்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் குரோம்பேட்டை மேம்பாலத்தில் இருந்து 200 அடி ரேடியல் சாலை வழியாக ஈச்சங்காடு சந்திப்பு, காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வழியாக வேளச்சேரி மார்க்கமாகவோ அல்லது துரைப்பாக்கம் மார்க்கமாகவோ சென்னைக்கு செல்லலாம்.
* ஜி.எஸ்.டி. சாலையில் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம். பல்லாவரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தாம்பரம் மேம்பாலம் வழியாக வலதுபுறம் திரும்பி வேளச்சேரி பிரதான சாலை வழியாக சேலையூர், சந்தோஷபுரம், பள்ளிக்கரணை வழியாக சென்னைக்கு செல்லலாம்.
* ஜி.எஸ்.டி. சாலையில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும் வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக சென்னைக்கு செல்லலாம்.
* கிஷ்கிந்தா சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும் வெளிவட்ட சாலை ஓ.ஆர்.ஆர். வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லலாம்.
வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த போக்குவத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.