பட்டாசுகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலை

இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி அதிகமாக இருந்ததால் போதிய விலை கிடைக்காமல் பட்டாசு வியாபாரிகள் திணறி வருகிறார்கள்.

Update: 2023-05-14 19:03 GMT

சிவகாசி, 

இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி அதிகமாக இருந்ததால் போதிய விலை கிடைக்காமல் பட்டாசு வியாபாரிகள் திணறி வருகிறார்கள்.

பட்டாசு உற்பத்தி

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய தாலுகாக்களில் பட்டாசு ஆலைகள் அதிகமாக இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தேவையான பட்டாசு உற்பத்தி கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

எவ்வித இடையூறும், பாதிப்பும் இல்லாமல் கடந்த 6 மாதங்களாக தேவைக்கு அதிகமான அளவில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 10 நாட்கள் மழை காரணமாக பட்டாசு ஆலைகள் இயங்கவில்லை. ஆனாலும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தேவைக்கு அதிகமான அளவிலேயே பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வியாபாரம் இல்லை

இந்த நிலையில் வழக்கமாக வடமாநில மொத்த வியாபாரிகள் மே மாதங்களில் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு வந்து இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகளை மொத்த விலை கொடுத்து வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது சிவகாசிக்கு வடமாநில வியாபாரிகள் வருகை இல்லை.

மேலும் உற்பத்தி செலவை கணக்கிட்டு பட்டாசுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் வடமாநில வியாபாரிகள் குறைந்த விலைக்கு பட்டாசுகளை வாங்க முயற்சி செய்கிறார்கள். போதிய விலை இல்லாமல் இங்குள்ள உற்பத்தியாளர்களும் பட்டாசுகளை விற்பனை செய்யாமல் வைத்துள்ளனர். இதனால் வழக்கமான விற்பனை இல்லாமல் பட்டாசு மார்க்கெட் முடங்கி உள்ளது.

சூடுபிடிக்கும்

இது குறித்து பட்டாசு ஏஜெண்ட் ராஜேஷ் கூறியதாவது:- வழக்கமாக இதுபோன்ற காலங்களில் அதிக அளவில் ஆர்டர்கள் வரும். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். ஆனால் தற்போது பட்டாசு வியாபாரம் மந்தமாக இருக்கிறது. வடமாநில வியாபாரிகள் குறைந்த விலைக்கு பட்டாசுகளை கேட்கிறார்கள்.

உற்பத்தி செலவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக இருப்பதால் விலை குறைக்க வாய்ப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. அதேநேரத்தில் தேவைக்கு அதிகமான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்து வரும் வாரங்கள் பட்டாசு வியாபாரம் சூடுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்