விளாத்திகுளத்தில் 9-ம் வகுப்பு மாணவர் மின்சாரம் தாக்கி பலி
விளாத்திகுளத்தில் வெல்டிங் பட்டறையில் வேலை செய்தபோது 9-ம் வகுப்பு மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் வெல்டிங் பட்டறையில் வேலை செய்தபோது 9-ம் வகுப்பு மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
பள்ளி மாணவர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் பால்ராஜ் (வயது 24). விளாத்தி குளம் அரசு மருத்துவமனை ரோட்டில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார்.
இந்த பட்டறை அருகில் வசித்து வருபவர் கர்ணமகாராஜன். இவருடைய மகன் குருமூர்த்தி (15). அங்குள்ள பள்ளியில் குருமூர்த்தி 9-ம் வகுப்பு படித்து வந்தார். குருமூர்த்தி பள்ளிக்கூட நேரம் முடிந்த பின்னர் பால்ராஜ் பட்டறையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
மின்சாரம் தாக்கி பலி
நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் குருமூர்த்தி வேலைக்கு சென்றார். இரவில் வேலையை முடித்து விட்டு பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார். அப்போது மின்சார சுவிட்ச் பெட்டி மீது காலை வைத்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட குருமூர்த்தி மயங்கி விழுந்தார். இதை அறிந்ததும் அவரை பால்ராஜ் காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் வந்து இருவரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குருமூர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
எம்.எல்.ஏ. ஆறுதல்
தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் வந்து குருமூர்த்தி உடலை பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குருமூர்த்தி குடும்ப வறுமை காரணமாக இந்த பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் மின்சாரம் தாக்கி பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் குருமூர்த்தியின் குடும்பத்தினருக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேரில் சென்று ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினார்.