விழுப்புரத்தில்பாதாள சாக்கடை நிரம்பி குடியிருப்புகளை சுற்றி தேங்கிய கழிவுநீர் பொதுமக்கள் பாதிப்பு

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை நிரம்பி குடியிருப்புகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Update: 2023-06-24 18:45 GMT

விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் 4-வது தெருவில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் அந்த அடைப்பை சரிசெய்ய நகராட்சி ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் விளைவாக அந்த பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் செல்ல வழியின்றி அங்குள்ள தெருவிலேயே குட்டைபோல் தேங்கி நிற்கிறது. அதோடு அத்தெருவில் தாழ்வான நிலையில் உள்ள சில குடியிருப்புகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதில் ஒரு வீட்டுக்குள் கழிவுநீர் புகுந்ததால் அவர்கள் வீட்டில் குடியிருக்க முடியாமல் பக்கத்து வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்தின் பிடியில் சிக்கியுள்ளது.

இதுபற்றி அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் கூறி கடந்த 3 நாட்களுக்கு மேலாகியும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதிக்கு நகராட்சி அதிகாரிகள் ஒருவர்கூட வந்து எட்டி பார்க்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் பாதிப்பு

இவ்வாறு குடியிருப்புகளை சுற்றிலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதி மக்கள், அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அப்பகுதி முழுவதும் வீசும் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தேங்கி நிற்கும் இந்த கழிவுநீரால் அங்குள்ள மக்களுக்கு பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே நகராட்சி நிர்வாகத்தினர், அப்பகுதியில் உள்ள கழிவுநீரை வெளியேற்றுவதோடு பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் வீதிக்கு வந்து போராடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்