விழுப்புரம் மாவட்டத்தில் டவுன் பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கோபால் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-07-08 17:01 GMT

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இத்திட்டமானது விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதை அறிந்துகொள்ளும் விதமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கோபால் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்களில் பயணம் செய்த பெண்களிடம் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து டாக்டர் கோபால் கேட்டறிந்ததுடன் பெண்கள் அனைவரும் நாள்தோறும் பஸ்களில் பயணம் செய்யும்போது கண்டக்டா்கள் இலவச பயணச்சீட்டு வழங்குகிறார்களா எனவும், கண்டக்டர்கள் கனிவான முறையில் நடந்துகொள்கிறார்களா எனவும் கேட்டறிந்தார்.

அறிவுரை

மேலும் டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களிடம், டிரைவர், கண்டக்டர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், பள்ளிகள், கல்லூரிகள் ஆரம்பிக்கும், முடியும் நேரங்களில் பஸ்களை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் பள்ளி- கல்லூரி மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும், பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும், அதிகப்படியான பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்கிடவும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில், போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கோபால், விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் மோகனிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் மற்றும் போக்குவரத்துக்கழக அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்